இந்தி திரையுலகில் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா. இவருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். வரும் 2021 ஜனவரியில், தங்களுக்கு குழந்தை பிறக்குமென கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று சிரஸாசனம் செய்யும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அது சிறிது காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா, இந்த பயிற்சி மிகவும் கடினமான ஒன்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனுஷ்கா சர்மா, "யோகா எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, நான் ஒரு கட்டத்திற்கு பிறகு, கர்ப்பகாலத்திற்கு முன்பு செய்த ஆசனங்களை, அதிகமாக திரும்புதல் மற்றும் முன்னோக்கி வளைதல் ஆகியவைகளை தவிர்த்துவிட்டு, உரிய துணையோடு தற்போதும் செய்யலாம் என எனது டாக்டர் பரிந்துரைத்தார். நான் பல வருடங்களாக செய்து வரும் இந்த சிரஸாசனதை, தற்போது செய்ய சுவரை துணையாக கொண்டேன். மேலும் எனது கணவர், கூடுதல் பாதுகாப்பிற்காக நான் பேலன்ஸ் செய்ய துணை புரிகிறார். இந்த சிரஸாசன பயிற்சி எனது யோகா குருவின் வீடியோ மூலம் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. இந்த கர்ப்பகாலத்திலும், நான் பயிற்சியை தொடர்வதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்" என கூறியுள்ளார்.
அனுஷ்கா ஷர்மா, கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று பயிற்சி செய்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சிலர், கர்ப்பகாலத்தில் டாக்டரும், யோகா மாஸ்டரும் அருகில் இல்லாதபோது, இது மாதிரியான பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இதுபோன்ற பயிற்சிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அது குழந்தையை பாதித்துவிடும் என கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.