‘ஆன்டி இண்டியன்’,‘உயிர் தமிழுக்கு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர் ஆதம் பாவா. இதில் உயிர் தமிழுக்கு படத்தை இயக்கியும் உள்ளார். இவரை நமது நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்தும், சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
அப்போது, ஆதம் பாவா கூறுகையில், “ஆன்டி இண்டியன் திரைப்படம் எடுத்தபோது புளூ சட்டை மாறன் எல்லாருக்குமே எதிரிதான். ஆனால் தியேட்டரில் கேட்டு கேட்டு அந்த படத்தை ஓட்டினார்கள். நான் வெறும் 100 ஸ்கீரின் தான் பிளான் பண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு 140 ஸ்கீரின் கிடைத்தது. பின்பு, அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு 250 ஸ்கீரின் பிளான் செய்திருந்தோம். அப்போது ரிலீஸ் தேதி நெருங்கும்போது இரண்டு நாளைக்கு முன்னாடி இன்னொரு படம் வந்தது. இது ஞானவேல் மற்றும் அந்த குடும்பத்தின் சதிதான். வெள்ளிக்கிழமை என்னுடைய படம் ரிலீஸாகிறது என்றால் புதன் கிழமை ‘ரசவாதி’ படத்தைச் சொருகுகிறார்கள். அப்படி என்றால் சினிமா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?, உண்மையில் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், அங்கிருந்துதான் என்.ஓ.சி. வாங்கி படத்தை வரிசைப்படுத்துகிறோம். அதன் பிறகு ரசவாதி படம் வந்ததால் எங்களுக்கு தியேட்டர் குறைந்து விட்டது. அதனால் என்னுடைய படம் வந்ததே தெரியாமல் போய்விட்டது.
ஜாபர் சாதிக் விவகாரத்தில் பின்னாடி இருந்து யூடியூபர்ஸ்க்கு பணம் கொடுத்து பெரிதாக ஊதிவிட்டது அந்த குடும்பம்தான். இதனால் அமீர் ஜெயிலுக்கா போய்விட்டார்? ஆனால் இதை ஊதி பெரிது பண்ணியது, எல்லோரையும் தூண்டிவிட்டு இதைச் செய்ய வைத்தது, பிறகு எங்க படத்திற்கு முன்னாடி வேறு ஒரு படத்தை இறக்கி எங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்தது, விமர்சனங்களைப் படத்திற்கு எதிராக பரப்பி, தியேட்டரிலிருந்து படத்தை தூக்க வைத்தது, என அனைத்துமே செய்தது அவர்கள் தான். அதற்காக நான் எடுத்த படம் ஆகா ஓகோ எனச் சொல்லவில்லை. ஒரு முறை ஜாலியாக பார்க்கும் படம்தான். இன்றைக்கு ஓ.டி.டி.யில் படம் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. ஆனால், தியேட்டரில் ஏன் இந்த வரவேற்பு கிடைக்கவில்லை, அப்படியென்றால் இது அவர்கள் செய்த சதிதான். அடுத்த இரண்டு படங்கள் ஞானவேல்ராஜாவுக்கு வருகிறது. அதில் அவர்கள் அனுபவிப்பார்கள். கங்குவா படமெல்லாம் என்ன ஆகப்போகிறது என்று பாருங்கள். உங்களுக்கும் அமீருக்கும் இடையில் உள்ள பிரச்சனையில் சக தயாரிப்பாளரான என்னை காலி செய்துவிட்டீர்கள்” என்றார்.