இந்தியில் சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் வைஷாலி டக்கர். இதில் சசுரால் சிமர் கா தொடர் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனிடையே கொரோனா காரணமாக மத்திய பிரதேசம் இந்தூரில் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார் வைஷாலி டக்கர்.
கடந்த 16ஆம் தேதி வைஷாலி டக்கர் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டார். உடனே அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை மேற்கொண்டனர் போலீசார்.
அப்போது வைஷாலி டக்கரின் அறையை சோதித்த போலீசார் அங்கிருந்து ஒரு 5 பக்கம் கடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், "ராகுல் நவ்லானி தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். ராகுல் தன்னை டார்ச்சர் செய்வது அனைத்தும் அவரது மனைவி திஷாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவனை காப்பாற்றுவதற்காக பொதுவெளியில் என்னை அசிங்கமாக ராகுலின் மனைவி திட்டினார். இதை சாதகமாக்கி தன்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்திருந்த ராகுல் என் வாழ்க்கையை சிதைத்தார். தயவு செய்து ராகுலையும் அவரது குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் எனது ஆத்மா சாந்தி அடையாது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
ராகுல் அவரது கல்யாணத்திற்கு முன் வைஷாலியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராகுலின் தந்தையும் வைஷாலியின் தந்தையும் இணைந்து வியாபாரம் செய்து வருவதால் இரு குடும்பங்களும் நல்ல உறவுடன் பழகி வந்துள்ளனர். இருவரின் வீடும் தனித்தனியே அருகில் இருந்துள்ள நிலையில் ராகுல் மற்றும் வைஷாலியும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் சில காரணங்களால் ராகுல் வைஷாலியை விட்டு விலக, திஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார் ராகுல். இருப்பினும் தனது முன்னாள் காதலியான வைஷாலியை மன ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனிடையே வைஷாலிக்கு அவரது பெற்றோர் திருமண முயற்சிகளை மேற்கொண்ட போது, தன்னுடனான தொடர்பு பற்றி கூறியும், வைஷாலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியும் திருமணத்துக்குத் தடையாக இருந்துள்ளார் ராகுல். அந்த வகையில் கடந்த ஆண்டு கென்யாவை சேர்ந்த அபிநந்தன் சிங் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிறகு கடந்த ஜூன் மாதம் நடக்கவிருந்த இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் ராகுல் தான் என அக்கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் வைஷாலிக்கு பார்த்த மணமகனுக்கு ராகுல் இடையூறாக இருந்து வருவதாக, வைஷாலியின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ராகுல் மற்றும் அவரது மனைவி திஷா ஆகியோரின் மீது தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாக வழக்குப் பதிவு செய்தனர் காவல் துறையினர். பின்பு ராகுல் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகி இருந்த வந்த நிலையில் ராகுலை இந்தூரில் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.