சின்னதிரையில் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி திவ்யா வீடியோ வெளியிட்டார். மேலும் அர்னவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். பின்பு இது குறித்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அர்னவ் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அர்னவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர் காவல் துறையினர். பின்பு நிபந்தனை ஜாமீனில் அர்னவ் வெளிவந்தார்.
இதனிடையே தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அர்னவ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "திவ்யாவும் நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், திருமணத்திற்கு பின்பு சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகாரை கூறியுள்ளார். நான் திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு. அவர் தான் என்னை தாக்கினார். இது குறித்து நான் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், அர்னவ்வின் மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் திவ்யாவின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. பின்பு, ‘அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால் இப்போதைய சூழலில் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது’ என நீதிபதி கூறினார். மேலும் அர்னவ்வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.