இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவந்தாலும், குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
சமீபத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் ராஜாக்கண்ணு மனைவி பார்வதி வறுமை நிலையில் இருப்பதால், அவருக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்த நடிகர் சூர்யா, "முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா, ‘ஜெய் பீம்’ படக்குழுவினர் சார்பாக ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் வைப்புத்தொகையாக அறிவிக்கப்பட்ட நிதி ரூ. 15 லட்சத்தைக் கொடுத்துள்ளார். முதலில் 10 லட்சம் தருவதாக கூறிய நிலையில், 2டி என்டர்டைமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக ரூ. 5 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ. 15 லட்சமாக வழங்கியுள்ளார்.