Skip to main content

அது நீங்க இல்ல; நான்தான்... ரமேஷ் கண்ணா கூறியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த ரஜினிகாந்த்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

ramesh khanna

 

ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தச் சூழலில், நடிகரும் கதையாசிரியருமான ரமேஷ் கண்ணா கோச்சடையான் படத்தில் பணியாற்றியது குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடனான நினைவுகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

கோச்சடையான் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள்? 

 

கோச்சடையான் படம் பற்றி பேசவேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் உள்ளன. இப்படத்திற்கான பாராட்டுகள் அனைத்தும் சௌந்தர்யா மேடமைத்தான் சேரும். கார்ட்டூன்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியாவை முதலில் அவர்தான் கூறினார்.  நாங்கள் ராணா படம் தொடர்பான வேலையில் இருந்தோம். அந்த நேரத்தில் ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த கார்ட்டூன் படத்தையே எடுக்கலாம் என முடிவெடுத்தோம். ராணா படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து கோச்சடையான் கதையை உருவாக்கினோம். ஜேம்ஸ் பாண்ட் ஷூட்டிங் நடந்த ஸ்டூடியோவில்தான் இந்த படத்தை எடுத்தோம்.

 

மறைந்த காமெடி நடிகர் நாகேஷை படத்தில் கொண்டுவந்தது ஏன்?

 

அனிமேஷன் மூலம் ஒருவரை வயதானவராக மாற்றலாம், வயது குறைத்து காட்டலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சௌந்தர்யா மேடம் கூறினார். அந்த நேரத்தில், மறைந்த காமெடி நடிகர் நாகேஷை கதையில் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டுவந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. எனக்கு, ரஜினி சாருக்கு, கமல் சாருக்கு, பாலசந்தர் சாருக்கு என அனைவருக்கும் பிடித்த ஒரு காமெடி கேரக்டர் நாகேஷ் கேரக்டர். சௌந்தர்யா மேடமும் சரி என்று சொல்லிவிட்டதால் அந்தக் கேரக்டரை படத்தில் கொண்டுவந்தோம். படத்தில் நாகேஷை கொண்டுவந்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானும் பாராட்டினார். முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர்தான் நடிக்க இருந்தது. அவர் நடிப்பு சரியாக இல்லாததால் நானே நடித்தேன்.  

 

லண்டனில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் எப்படி இருந்தது?

 

லண்டன் விமான நிலையத்திலேயே ஒரு சம்பவம் நடந்தது. அதுபற்றி நான் அதிகம் வெளியே கூறியதில்லை. நாங்கள் அனைவரும் லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கிருந்த அதிகாரிகள் என்னைத் தனியே உட்காரவைத்துவிட்டார்கள். எதற்காக பிடித்துவைத்துள்ளார்கள் என்று எனக்குப் புரியவில்லை. விஷயம் தெரிந்ததும் ரஜினி சார் உட்பட முன்னால் சென்ற அனைவரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் யாரையும் அருகில் அனுமதிக்காத போலீசார் என்னை விடமுடியாது என்று கூறி அவர்களை அனுப்பிவிடுகின்றனர். எனக்குத் தெரிந்த இங்கிலீஷில் நான் பேசிப்பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதன் பிறகு, விக்கிப்பீடியாவில் நான் யாரென்று பார்த்து உறுதிசெய்துவிட்டு என்னை அனுப்பினார்கள். 

 

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து கூறுங்கள்.

 

கோச்சடையான் ஷூட்டிங்கின்போது தீபிகா படுகோனுக்கு நான்தான் வசனம் சொல்லிக்கொடுப்பேன். நானும் உடன்நடிக்க வேண்டியிருந்ததால் நாகேஷ் கெட்டப்பில்தான் இருப்பேன். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு அவரிடம் சென்று உங்களுடன் ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றேன். இந்த உடையில் நான் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள முடியாது எனத் தீபிகா படுகோன் கூறிவிட்டார். உனக்கு காலைல வசனம் சொல்லிக்கொடுத்தது நான்தான் என்றவுடன் சார் நீங்களா... மீசை இல்லாமல் பார்த்ததால் அடையாளமே தெரியவில்லை என்றார். பின், இருவரும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். 

 

மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினி சார் வந்தார். படப்பிடிப்பெல்லாம் எப்படி நடக்கிறது என என்னிடம் கேட்டார். நல்லா போய்கிட்டு இருக்கு சார் எனக் கூறிவிட்டு, தீபிகா படுகோனுடன் நடித்த முதல் தமிழ் நடிகர் என்பது பெருமைதான் சார் என்றேன். உடனே அவர் சிரித்தார். சார்... நான் என்ன சொன்னேன்... நான் நேத்தே நடிச்சிட்டேன்... நீங்க இரண்டாவது நடிகர்தான் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே அதை ஜாலியாக எடுத்துக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"தந்தை இழப்பு என்பது சாதாரணமான இழப்பு இல்லை" - அஜித்திற்கு ரமேஷ் கண்ணா ஆறுதல்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

ramesh kanna about ajith father passed away

 

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) நேற்று அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் நேரில் சென்றோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்டோ ஆறுதல் கூறி வருகின்றனர்.  

 

நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர். ட்விட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர். 

 

இதனிடையே அஜித்தின் நெருங்கிய நண்பரான நடிகர் ரமேஷ் கண்ணா அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "அஜித்தின் தந்தையார் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் ஊரில் இல்லாததால் வர முடியவில்லை. இது ஒரு பெரிய இழப்பு. தந்தை இழப்பு என்பது சாதாரணமான இழப்பு இல்லை. அஜித், நீ நிறைய பாதைகளைக் கடந்து பல கஷ்டங்களைக் கடந்து வந்துள்ளாய். நான் உன்னுடன் 90 காலகட்டத்திலிருந்து பயணித்து வருகிறேன். எல்லா சோதனைகளையும் சகித்து நீங்க வந்திருக்கிறீங்க. நிச்சயமாக இதுவும் ஒரு சோதனை தான். இதையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்." என்றார்.    

 

ரமேஷ் கண்ணா, அஜித்தின் 'அமர்க்களம்', 'நீ வருவாய் என', 'ஆஞ்சநேயா', 'வில்லன்', 'வரலாறு', 'வீரம்' உள்ளிட்ட  பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

Next Story

"முதுமை காலத்தில் செய்ய நானும் விவேக்கும் வைத்திருந்த திட்டம்..." கண்கலங்கும் நடிகர் ரமேஷ் கண்ணா!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

Ramesh Khanna

 

தமிழ் மக்களால் சின்ன கலைவாணர் என அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக், சமீபத்தில் காலமானார். எதிர்பாராத விதமாக நடந்த அவரது மரணம், ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் நோக்கோடு பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் மரம் நடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், விவேக்குடனான தன்னுடைய நாட்கள் மற்றும் நினைவுகள் குறித்து நடிகரும் விவேக்கின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் கண்ணா நக்கீரன் ஸ்டூடியோவிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...

 

விவேக்கின் மரணம் பிறருக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், எனக்குப் பெரிய இடி. எனக்கு அவனை 1985லிருந்தே தெரியும். நாங்கள் இருவரும் பழகியதுபோல யாரும் பழகியிருக்கமாட்டாங்க; பழகவும் முடியாது. அவன் அரசு வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே, நான் சினிமாவில் ஒரு படம் இயக்கி அது வெளியாகாமல் இருந்தது. ஹியூமர் கிளப்பில் தன்னுடைய பயணத்தை தொடங்கி, அதன் மூலம் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானான். அந்தப் படம் வெளியான பிறகு நான் ஹியூமர் கிளப் போயிருந்தேன். நம்ம கிளப்ல இருந்து போன ஒருத்தர் சினிமாவில் நடிச்சிருக்கார்.. என்ன அந்த அழுகிற சீன்ல மட்டும் சரியா நடிக்கலைனு அங்க சொன்னாங்க. உடனே நான் எந்திச்சு, இது விவேக்கிற்கு முதல் படம்தான். இன்னைக்கு பெரிய நடிகரா கொண்டாடுற கமல்ஹாசன் முதல் படத்துல எப்படி அழுதார்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன். அப்போது விவேக் அங்க இல்லை. பின், விவேக் வந்தபோது ரமேஷ் கண்ணா உன்னை பாராட்டினார்னு சொல்லிருக்காங்க. அப்படித்தான் எனக்கும் விவேக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

 

என்கிட்டே சைக்கிள்தான் இருந்தது. அவன்கிட்ட பழைய ஃபியட் கார் இருந்தது. கோடம்பாக்கத்திலுள்ள அவர் வீட்டில் இருந்து கிளம்பி, வடபழனியில் இருந்த என் வீட்டிற்கு வருவான். பின் இருவரும் அவர் காரிலிலேயே சென்று அதிகாலை பீச்சுல வாக்கிங் போவோம். ஆரம்பத்தில் வாய்ப்பிற்காக அவனுக்கு நான் பரிந்துரை செய்துள்ளேன். எனக்காக அவன் பரிந்துரை செய்துள்ளான். கே.எஸ்.ரவிக்குமார் சாருடைய அறிமுகமே எனக்கு விவேக் மூலமாகத்தான் கிடைத்தது. வாழ்க்கை அப்படியே நல்ல படியாக போய்க்கொண்டு இருந்தது. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. என்னைவிட 10 வயது சின்னப்பையன் விவேக். அவன் இருந்து நாங்கெல்லாம் போயிருக்கலாம். அவன் இருந்தாலாவது நாட்டுக்கு, சமூகத்தை நல்லது செஞ்சிருப்பான். எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணணும்னு நினைப்பான். நான் ஏதாவது சீரியல், படம் பண்றேன்னு தெரிஞ்சா யாரையாவது கூட்டிட்டு வந்து இவங்களுக்கு வேஷம் கொடு என்பான். 

 

கடைசி காலத்தில் சந்தோசமான விஷயம் என்பது பழையகால நண்பர்களைப் பார்த்து அவர்களோடு பேசுவதுதான் என்பார்கள். தற்போது, அதை நான் இழந்துவிட்டேன். வயசான பிறகு நிறைய காமெடி சீரியல்கள் சேர்ந்து பண்ணனும் என்றெல்லாம் நானும் விவேக்கும் நிறைய பிளான் பண்ணியிருந்தோம்" என உருக்கமாகப் பேசினார்.