கரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்துவருகின்றனர். கஷ்டப்படும் மக்களுக்குப் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் நான்கு பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை தருவதோடு, ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளார். டிஜிட்டல் வழி கல்விக்காக இந்தப் பள்ளிகளில் சுதீப், கணினிகளை நிறுவியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பள்ளியின் வசதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் சுதீப் ஒரு தன்னார்வலர் குழுவை நியமித்துள்ளார்.
கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் வெளியான 'புலி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சூதீப் என்பது நினைவுகூரத்தக்கது.