Skip to main content

அடிக்கடி சண்டை போட்ட தம்பதி; பயணத்தால் ஏற்பட்ட மாற்றம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 64

Published on 05/10/2024 | Edited on 05/10/2024
 jay-zen-manangal-vs-manithargal- 64

தான் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்ட தம்பதிகளுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார். 

ஒரு வசதியான குடும்பம். பண ரீதியாக எந்த பிரச்சனையும் இன்றி தங்கள் இரண்டு குழந்தைகளை வளர்த்து வந்தனர். அப்படி இருந்தும் ஏதோ ஒரு வகையில் அடிக்கடி சண்டை போட்டு 2,3 நாள் பேசாமல் இருப்பார்கள். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் சண்டை போட்டது நீங்களா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு சில நேரம் சேர்ந்து இருப்பார்கள். இதுபோல தொடர்ந்து சண்டைகள் நடப்பதை எப்படி நிறுத்துவது என்று என்னை அந்த குடும்பம் என்னை சந்தித்தனர். 

அப்போது அந்த தம்பதியினரிடம் பேசும்போது, ஒரு இறுக்கமான சூழ்நிலையில் தினமும் செய்யக்கூடிய வேலை, சமையல், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது போன்றவற்றை சுழற்சி முறையில் செய்து வந்தது தெரியவந்தது. நான் அந்த தம்பதியினரிடம் எப்போதாவது ட்ராவல் செய்துள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சமீபத்தில் கூட ஒரு இடத்திற்கு சென்று வந்ததாக கூறினர். மீண்டும் நான் அவர்களிடம் காலில் சலங்கை கட்டிக்கொண்டு டூர் செல்வதுபோல் இல்லாமல் ட்ராவல் பண்ணுங்கள் என்றேன். பின்பு ட்ராவலுக்கும் சுற்றுலாவுக்கும் இடையேயான வேறுபாடுகளை கூறி அனுப்பி வைத்தேன். ஆனால் இதுபோலதான் ட்ராவல் செய்யும்போது நடந்துகொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அதை அவர்களிடமே விட்டுவிட்டேன். 

நான் சொன்னதுபோல அந்த தம்பதியினர் அலுவலகத்திலுள்ள உயர் அதிகாரிடம் அனுமதி பெற்று ஒரு ட்ராவல் ஏற்பாடு செய்து குடும்பத்துடன் சென்றுள்ளார். பொறுமையாக எங்கு சென்றாலும் அவரசரப்படாமல் சுற்றிப்பார்த்த அந்த குடும்பம் நிறைய நபர்களைச் சந்தித்து பேசியுள்ளனர். காரில் செல்லும்போது சாலை பணியில் ஈடுபடும் நபர்களிடம் இறங்கி பேச தொடங்கியுள்ளனர்.

அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணுக்கு தார் காலில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது அதையெல்லாம் பார்த்த அந்த தம்பதியின் இரண்டு குழந்தைகள் நாம் இதுபோல கஷ்டப்படாமல் ஜாலியாக இருப்பதாக இருவருக்குள் பேசி இருகின்றனர். இதை பார்த்த அந்த தம்பதியினர் மகிழ்ச்சியில் வீடு திரும்பியுள்ளனர். அதன் பிறகு ட்ராவல் செய்த அனுபவங்களை தங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சொல்லி பேசியிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்த அங்குள்ள உயர் அதிகாரி, வேலை செய்பவர்களின் மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தினருடன் அவர்களுக்கு ட்ராவல் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதனால் மன அழுத்தத்தை குறைக்க இதுபோன்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.