ஜெய் ஜென் என்ற மனநல ஆலோசகர் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், சொத்துகளுக்காக குடும்பத்தை இழக்கத் தயாரான பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு கணவன், மனைவி இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசதியாக வாழ்ந்து வருகின்றனர். கணவன் இருப்பது போதும் என்ற மனநிறைவுடன் இருக்கையில், மனைவி சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார். முதலில் மனைவி, தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைத்து கணவனின் சம்மதத்தோடு தனது பெயரில் நிலம் வாங்குகிறார். இதுவே போகப்போக நிறைய இடங்களை வாங்கத் தூண்டுதலாக இருந்திருக்கிறது. மனைவி வாங்கிய சொத்துகளைவிட, அதற்காக இருக்கும் கடன் தொகை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு கட்டத்தில் சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு அதிகமானதால் அவ்வப்போது வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு இடையேயான உறவுகள் குறையத் தொடங்கியுள்ளது. இதையெல்லாம் தொடர்ந்து கவனித்து வந்த அந்த கணவர், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அந்த தம்பதி என்னைப் பார்க்க வந்தனர்.
அப்போது அந்த கணவரிடம் நான் பேசும்போது, சார் என் மனைவி அதிகமாகச் சொத்து சேர்த்ததால் கடனும் அதிகரிக்கிறது. இதனால் நான் குடிக்க ஆரம்பித்து விவாகரத்து முடிவுக்கு வந்துவிட்டேன் என்று கூறினார். சொத்து ஒரு தொகை இருந்தால் அதற்காக வாங்கிய கடன் அதைவிடவும் அதிகமான தொகையாக இருக்கிறது. நான் சொல்லிப் பார்த்தும் என் மனைவி கேட்பதாக இல்லை. ஒரு முறை, இருக்கின்ற பென்ஸ் காரை விற்றுவிட்டு அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் காரை வாங்குவோம் என்று என் மனைவி சொல்கிறாள் என்றார். எப்போதும் வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது குழந்தைகளிடமும், அந்த பெண் எரிச்சலாக நடந்துகொள்கிறார்.
அதைத்தொடர்ந்து அவரின் மனைவியிடம் பேசும்போது, என் கணவர் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல் ஓடுகிறார். அதனால் நான் என் குழந்தைகளுக்காகவும், எனக்காகவும் சொத்துகள் சேர்க்கத் தொடங்கியதாகக் கூறினார். அவரிடம் பேசும் போது, தான் செய்வதுதான் சரி என்று பிடிவாத குணத்தில் இருந்தார். தொடர்ந்து பேசும்போது, எல்லா தேவைக்கும் ஒரு பட்ஜெட் போடுங்க என்றேன். அவரின் மனைவியும், யோசித்து புதிது புதிதாக பட்ஜெட் போட்டுக் கொடுத்தார். அப்படி இருந்தும் அவர்களிடம் இருந்த சொத்துகளைவிடக் குறைவாகத்தான் பட்ஜெட் வந்தது. இருந்தும், அவரின் மனைவி ஒரு வேளை என் கணவருக்கு எதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்வது என்று தொடர்ந்து தன்னுடைய செயல்கள் சரியானது என்று நிரூபிக்க ஆரம்பித்தார். அதற்காக தன் கணவரே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றார்.
அதற்கு நான் அந்த பெண்ணிடம், உங்களுக்கு குடும்பம் முக்கியமா? இல்லை சொத்துதான் முக்கியமாக? என்று கூறி பல அறிவுரைகளைக் கூறினேன். பேசும்போதே அந்த பெண்ணுக்கு சொத்தையெல்லாம் விற்க வேண்டுமா என்று அழுகை வந்துவிட்டது. தொடர்ந்து நான் அந்த பெண்ணிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளை மாற்றுத்திறனாளிகள் போல் நடத்துகிறீர்கள். நீங்களே மைதானத்தில் விளையாடி குழந்தைகளை வெறும் மைதானத்தில் மட்டும் விட்டுவிடுகிறீர்கள். ஒரு வயதான தம்பதி ஒரு இனோவா காரில் டீசண்டாக வருகின்றனர். அதேபோல் இன்னொரு தம்பதி ஜாகுவார் காரில் வருகின்றனர். பார்க்க இருவருமே நன்றாக இருப்பதுபோல் தெரியும் ஆனால் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் ஜாகுவார் கார் தம்பதி அதற்கு இ.எம்.ஐ. கட்டி பல பிரச்சனைகளில் இருந்திருப்பார்கள். இதுபோல பல அறிவுரைகளை அந்த பெண்ணிடம் கூறினேன். இப்போது கணவன், மனைவி இருவரும் தங்களிடம் இருந்த கொஞ்ச சொத்துகளை விற்று கடன் சுமையைக் குறைத்து ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். இப்போது அந்த பெண்ணின் கணவர் என்னைப் பார்த்தல் மன அமைதி வந்தது என்று சிரிப்பார்.