திருவேற்காட்டில் ஒரு தனியார் மருத்துவ மனையில் மருந்துகளின் நெடியையும் மீறி என் வயிற்றில் கலைந்த சிசுவின் இரத்த வாசனையோடு பேசுகிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு சுபயோக சுபதினத்தில் எனக்குத் திருமணம். ஹனிமூன், விருந்து, இத்தனை காலம் பழகிய மண்ணில் இருந்து வேரொடு பிய்த்து எறிந்து புதிய இடத்தில் காலூன்றியது என நாட்கள் இறக்கைகட்டிப் பறந்தாலும் நான் முதல் மாதம் வீட்டுக்கு தூரம் என்று நிற்கும் போது உறவினர்களின் புருவம் நெறிபடுவதைக் கண்டேன். என்ன உம் மருமக இன்னும் நல்ல சேதி சொல்லலையா என்ற கேள்விகள் எனக்கு நேராகவும் மறைமுகமாகவும் வீசப்பட்டது.
பெண்பிள்ளை, பூப்படைதல், கல்யாணம், மகப்பேறு என்ற எதிர்பார்ப்புகளோடே கவனிக்கப்படுகிறாள் எப்போதும் எத்தனை கால மாற்றங்கள் வந்தாலும்! என்னக்கா கல்யாணமாகி ஒரு மாசந்தானே ஆகுது. சின்ன சிறுசுங்கதானே இன்னும் கொஞ்சநாள் சந்தோஷமா இருந்திட்டு அப்பறம் பிள்ளைப் பெத்துக்கட்டும் இப்போ ஒண்ணும் அவசரமில்லை என்று ஒப்புக்காக மற்றவர்கள் வாயை அடைத்தாலும் என் புகுந்த வீட்டினரின் எதிர்பார்ப்பும் அதுதான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு நா பொழுது போகாம ஊர்சுற்றி, சரம்சரமா பூவைச்சி அலங்கரிச்சிட்டு என்ன புண்ணியம் இன்னும் உன் வயிறு திறக்கலையே பேசாம ஆஸ்பத்திரிக்கு போய் பாக்குறீயா? விசாரிப்புகளுக்கு மத்தியில் அன்னையின் மடியில் படுத்துக்கொண்டு விசும்பினேன்.
நீ ஒண்ணும் கவலைப்படாதே உங்க அக்காவுக்கும் நாலைந்து மாசம் பிறகுதான் பிள்ளையுண்டாச்சு நானும் கூட அப்படித்தான் பட்டிக்காட்டிலேயே ஒண்ணும் கேட்கலை, ஆனா உங்க வீட்டு ஆளுங்களுக்கு ரொம்பத்தான் அவசரம். அம்மா தன் குடும்ப பெருமையை விளங்க வைக்க வெளிநாட்டில் கட்டிக்கொடுத்த அக்காவிற்கு பேசி கரு தங்குவதற்கு மாத்திரைகளை அனுப்பிடச் சொன்னாள்.
ஏம்மா டாக்டரைப் பார்க்காம மாத்திரை சாப்பிடலாமா?
இப்போ உங்க மாமியார்க்கு தெரியாம போக முடியாதேடி இலேசுபாசா தெரிந்தாலும் மூக்கு வேர்த்திடும் அப்பறம் எல்லாருக்கும் கஷ்டம் தான். வெளிநாட்டு மருந்து அப்படியொன்னும் கெட்டதா இருக்காது. விலையும் அதிகம்தான். அம்மா என்ன உனக்கு கெடுதலா செய்யப்போறேன். அந்த வார்த்தைகளின் வீரியம் மருந்தின் வீரியத்தை மறக்கடிக்கச் செய்ததென்னவோ உண்மைதான். சொல்லிவைத்ததாற் போல், நான் மறுமாதமே விலக்காகவில்லை. கண்கொத்திப் பாம்பாய் மூன்றாவது மாதம் நான்கு நாட்கள் தள்ளியும் நான் விலக்காமல் இருப்பதால் என்னம்மா நாள் தள்ளிப் போயிருக்குப்போல என் அத்தையின் முகமெல்லாம் புன்னகையும் சிறு சந்தேகமும்.
ஆமாம் அத்தை எனக்கு நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தபடியே, எல்லாம் அந்த கருமாரியம்மனின் செயல் பார்த்தியா இரண்டு வாரம் தொடர்ந்து தொட்டில் கட்டியதால் தான் இந்த பிச்சையை ஆத்தா உனக்குக் கொடுத்திருக்கா, நான் உண்ட மாத்திரைகளின் வீரியமா அல்லது என் கணவரின் வீரியமா என்பதை யோசியாமல் நானும் அன்றே அம்மனுக்கு ஒரு விளக்குப் போட்டேன். வீட்டிலேயே ஒரு சின்ன யூரின் டெஸ்ட் அதன்பிறகு டாக்டரிடமும் ஒரு கன்பர்மேஷன். மகள் உண்டானதில் கர்வம் தொனிக்க அம்மா என் புகுந்த வீட்டு உறவுகளைப் பார்த்த பார்வைகள், மசக்கையின் அதிகாலை அவஸ்தைகளில் நான் நன்றாகவே கவனிக்கப்பட்டேன்.
45 நாட்களின் முடிவில் ஸ்கேன், வயிறு முட்ட தண்ணீர் ஆனாலும் இப்போதே உருவம் தெரியுமா என்ற எதிர்பார்ப்பும் அக்காவின் துணைக்கு வந்தபோது கர்ப்பையின் வாயிலில் துடித்த அந்த முழுமை பெறா சிசுவின் அசைவுகள் இப்போதும் நினைவில் இருந்து நீங்காமல் நானும் ஒரு ஜீவனை சுமக்கிறேன் என்னை மட்டுமே நம்பி என் வயிற்றில் ஒரு உயிர் அந்த பிள்ளைக்கு பேர் வைத்து அது என்ன படிக்கவேண்டும் எப்படி வளர்க்க வேண்டும் என்பது வரை மெளனமாய் மனதின் பட்டியலில் என் பேரைக் கூப்பிடுகிறார்கள் ஸ்கேன் முடித்துவிட்டு வந்து மீண்டும் தொடர்கிறேன். ஸ்கேன்லே குழந்தை எந்த பொசிஷன்ல இருக்குன்னு தெரியலை. அதனால், கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம். சில நேரம் நாள் தள்ளிக் கூட தெரியும் உனக்கு பிசிஓடி பிரச்சினை இருக்காம்மா லாஸ்ட் டேட் என்னைக்கு என்று சில கேள்விகளைக் கேட்டபின் நான்கைந்து நாட்களாக என் கைகள் அனைத்திலும் ரத்த சோதனையினால் ஏற்பட்ட பொத்தல்கள்.
மருத்துவரின் அறிவுரைப்படி ரத்தப்பரிசோதனைக்கு கிளம்பும் சமயம் ஏம்மா, என்ன இது உன் புடவையில் சிகப்பா மாமியாரின் கலவரக்குரல் மறுபடியும் குளித்து உடை மாற்றினேன். அத்தை எனக்கு விலக்கு வரமாதிரியிருக்கு என்று என் குரல் அழுகை கலந்திருந்தது. அதெல்லாம் ஒண்ணுமில்லை சில பெண்களுக்கு பிரசவம் வரைக்கும் கூட தீட்டு படுமாம். பயப்படாதே நாம இப்பவே டாக்டரை பார்க்கப் போகலாம். சென்னை வடபழனி பஸ்ஸாண்ட்டுக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனை அங்கே மறுபடியும் சோதனைக் கூண்டின் எலியைப் போல என்னாகுமோ என்ற அச்சம் மனதை பிராண்டிட நான் ஸ்கேன் எடுக்கும் படுக்கையில்,
அன்னைக்கு பார்த்த அதே கண்டிஷன் தான் கர்ப்பபையில் கரு இருக்கு ஆனா அது முழுமையா இல்லைன்னு நினைக்கிறேன் இப்போ ரத்தப்போக்கு வேற அதிகமாக இருக்கு ஒருவேளை.... எல்லாரும் கூடிப்பேசி அபார்ஷன் பண்ணலான்னு முடிவு செய்தார்கள். என் கனவுகள் அனைத்துமே மணல் கோட்டையைப் போல கரைந்து போனது. அடி வயிற்றில் சுரீர் என்று வலி இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு இந்த முறை உடம்பை கொஞ்சம் தேத்தி அனுப்புங்கோ என்று அம்மாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டேன் நான். எதை நினைச்சும் கவலைப்படாதேம்மா இப்படி சுத்தப்படுத்திட்டா கூட உடனே நின்னுடும். அப்புறம் எங்க சைடுல யாருக்கும் சொல்லலை நீங்களும் தெரிவிக்கவேண்டாம் என்று நாசூக்காக எச்சரித்துவிட்டு நகர்ந்தார் மாமியார்.
இரண்டு மூன்று நாட்கள் எந்த வித சிக்கலும் இல்லை ஆனால் அடிவயிற்றில் மட்டும் வலி கதறிக்கொண்டே இருந்தது. கனவுகள் பொய்த்துப் போன கவலையில் நான் இந்தா மோஷன் போலைன்னு சொன்னீயே கொஞ்சம் விளக்கெண்ணையை குடி சூட்டு வலியாத்தான் இருக்கும். பேசாமல் குடித்தேன் யாருக்கும் சொல்லவில்லை என்றாலும் சில சாதாரண பார்வைகளே பரிதாபப் படுகுழியில் தள்ளின. அதற்குமேல் வலி பெருகிக்கொண்டே இருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அருகிலிருந்த மருத்துவமனை அவரசத்தைப் பூசிக் கொண்டது. ஐ.சி.யூ கேரில் தேடிப்பிடிக்க நரம்பில்லாமல் கழுத்தின் இடது பக்கத்தில் சலைன் ஏற என் வயிற்றில் கர்ப்பை டியூப்பில் குழந்தை வளர்ந்திருக்கிறது அதை சரியாக கவனிக்காததால் தவறான மருத்துவத்தால் கருப்பையில் இல்லாத குழந்தை சுரண்டி கலைக்கப்பட்டு இருக்கிறது. குழாயில் வளர்ந்த குழந்தை கவனிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. அந்த ட்யூட் வெடித்து விட்டதாம் இரண்டாக கட்டான அதை வெட்டி எறிந்து விட்டார்கள். அடுத்த முறை நான் குழந்தை உண்டானால் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று! சிரமமாம்.
பத்துநாட்களாக மருத்துவமனை வாசம்தான் இன்னும் இரண்டொரு நாளில் வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் மனம் முழுக்க பயம் என்னை நம்பி வந்த அந்த சின்னஞ்சிறிய உயிர் என் கண்முன்னே இரத்தமாய் ஆஸ்பத்திரி ட்ரேயில்! யாருடைய அவசரமோ என்மீது விழுந்து இருக்கிறது. எல்லாரும்தான் பிள்ளை உண்டாகிறாங்க அய்யய்யோ இந்த பொண்ணுக்கு இப்படியா ஆகணும் என் வாயில் குழைந்த ரசம் சாத்தை கரண்டி கொண்டு ஊட்டியபடியே என் அத்தை புலம்பிக்கொண்டிருக்க, நான் மட்டும் சுவடில்லாத என் வயிற்றை தடவிக்கொண்டேன். கையை அசைக்காதேம்மா இப்பத்தான் வீக்கம் குறைஞ்சிருக்கு இன்னும் நியூட்டிஷன் போடணும். உடல் முழுவதும் ரணமாய் வலித்தது.
பெரிய ஆஸ்பத்திரின்னு போனா இப்படியா தப்பா வைத்தியம் பார்ப்பாங்க நீ நல்லபடியா வீட்டுக்கு வா நான் அவங்க மேல கேஸ் போடப்போறேன் கணவரின் குரல். யாரையும் பார்க்க திராணியின்றி உயிரின்றி கரைந்த அந்த சிசுவை நான் அறியாமலே வயிற்றுச் சுவரை அலங்கரிக்க வந்த ஓவியம் கலைந்ததை எண்ணி கதறிக்கொண்டு!