Skip to main content

மிரட்டல் தர்பார்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #4

Published on 02/11/2019 | Edited on 02/11/2019


“என்ன விளையாடுறீங்களா?”

வெறி பிடித்தவர்போல் கத்தினார் ஹிட்லர்.

“நான் சொன்னதை ஏற்காவிட்டால், மூன்றே நாளில் ஜெர்மனியை முடக்கிவிட முடியும். அதிரடிப்படையிடம் ஜாடை காட்டினால் ஜெர்மனி நாசமாகிவிடும்” மிரட்டினார் ஹிட்லர். நிஜமாகவே ஸ்லெய்ச்சரும், பாப்பெனும் மிரண்டு விட்டார்கள். தனிப்பட்ட விதத்தில் மரியாதையானவர் ஹிட்லர். எல்லோரிடமும் பணிவாகவும், அன்பாகவும்தான் பேசிப் பார்த்திருக்கிறார்கள். சாத்தான் புகுந்தது போல் மேடையில்தான் பேசிப் பார்த்திருக்கிறார்கள்.

அப்படி என்னதான் நடந்தது?

ஹிட்லரின் நிபந்தனைகளை ஏற்க முடியாது. வேண்டுமென்றால் துணை பிரதமராக நியமிக்கலாம். பிரஷ்யாவுக்கான உள்துறை அமைச்சர் பதவியை விட்டுத்தரலாம் என்று ஹிண்டன்பர்க் கூறியதாக ஹிட்லரிடம் வந்து ஸ்லெய்ச்சரும், பாப்பெனும் தெரிவித்தனர்.

அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம். நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சி. 230 இடங்களை கையில் வைத்திருக்கும் கட்சி. அதன் தலைவருக்கு துணை பிரதமர் பதவிதான் தரமுடியும் என்றால், ஹிட்லர் ஆவேசப்பட மாட்டாரா? அவர் அதிகாரத்திற்கு வருவார். நமக்குக் காரியங்களை சாதகமாக முடித்துத் தருவார் என்று தொழிலதிபர்கள் அவர் மீது ஏராளமான முதலீடு செய்துள்ளனர். மூன்று ஆண்டுகளில், அடுத்தடுத்து நான்கு தேர்தல்களைச் சந்திக்க முடிந்திருக்கிறது என்றால் சும்மாவா?

 

v



இப்போதும் தனது பதவிக்கனவு தகர்ந்து போவதை ஹிட்லரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஸ்லெய்ச்சரும், பாப்பெனும் சென்றுவிட்டனர். ஹிட்லர் வேர்த்துப் போயிருந்தார். அவரது கட்சித் தலைவர்கள் மவுனமாக இருந்தனர். எழுந்து, அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.

“இந்த முறை என்ன வந்தாலும் சரி. நமக்கு பதவி இல்லையென்றால் நாடாளுமன்றம் நடக்கக் கூடாது” டேபிளில் ஓங்கிக் குத்தினார். அதே நாள் மாலையில் குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க் ஹிட்லருக்கு அழைப்பு விடுத்தார். அந்தச் சந்திப்பு காரசாரமாக இருந்தது. “உங்கள் நடவடிக்கை சரியில்லை. மிரட்டல் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வன்மம் நாட்டுக்கு நல்லதல்ல. அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் எல்லை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. எல்லோரையும் அனுசரித்துப் போகும் பக்குவமான மனநிலைக்கு வரப்பாருங்கள். இப்போதைக்கு எனது விருப்பப்படி துணை பிரதமராகி, அரசு செயல்பட ஒத்துழைப்புத் தாருங்கள்”

86 வயது முதியவர் ஹிண்டன்பர்க் அறிவுரை கூறினார். “முடியாது. பாப்பென் அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது. எனக்கு பிரதமர் பதவி அல்லது மீண்டும் தேர்தல்” 44 வயது ஹிட்லர் அழிச்சாட்டியமாக பேசிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாஜிக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் கோயரிங் எழுந்து, பாப்பென் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்தார்.
 

 

gh



அதற்கு அவசியமில்லை என்றார் பிரதமர் பாப்பென். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், மீண்டும் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

போச்சுடா

1928ல் தேர்தல். அப்புறம் 1930ல் ஒரு தேர்தல். 1932ல் அடுத்தடுத்து இரண்டு சுற்று குடியரசுத்தலைவர் தேர்தல். மீண்டும் அதே ஆண்டு ஜூலையில் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தல். இப்போது தேர்தல் முடிந்து இரண்டே மாதங்களில் மீண்டும் தேர்தல். மக்கள் அலுத்துப் போனார்கள். தேர்தல் என்றாலே வெறுத்துப் போனார்கள். கோயபல்ஸ் புதிய வாக்குறுதிகளைத் தயாரிக்க முடியாமல் பொய்களைத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது. நாஜிக் கட்சியினரை உசுப்பிவிட முடியாமல் திணறினார். முன்புபோல பிரச்சாரத்தில் உக்கிரம் இல்லை.

பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போதே ஹிட்லருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சித் தகவல். அவரை மிகவும் நேசித்த ஈவா பிரவுன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு விரைந்தார் ஹிட்லர். ஈவா பிரவுனின் அருகிலேயே இருந்தார். தேர்தல் பிரச்சாரம் மந்தமாகியது.

 

 

jh



ஈவா பிரவுனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

ஜெலி மரணத்திற்கு பின்னர் ஹிட்லர் மாறியிருந்தார். பார்க்கிற ஆளிடமெல்லாம் தனது அன்புக்குரிய ஜெலி இறந்துவிட்டதைப் பற்றியே பேசினார். அவளைப் பற்றி பேச்சு வந்தாலே, ஹிட்லரின் கண்கள் கசிந்துவிடும். ஜெலி உயிரோடு இருக்கும்போது, ஈவா பிரவுனுடன் உல்லாசமாக சினிமாவுக்குப் போன ஹிட்லர், அவளுடைய மரணத்திற்கு பின்னர் அரசியலில் தீவிரமாகிவிட்டார். அனேகமாக மறந்தே விட்டார். அவளைப் பார்த்தாலும் லேசான புன்னகையுடன் விலகிவிடுவார். தனியே சந்திப்பதில்லை. ஹிட்லரைக் கவரும் தனது முயற்சி நிறைவேறாததால், தற்கொலைக்கு முயன்றாள். ஹிட்லரின் காதல் மனம் அப்போது வெளிப்பட்டது. தனது எதிர்காலமே இந்தத் தேர்தலில்தான் இருக்கிறது என்றபோதும், அவர் ஈவா பிரவுனின் அருகிலேயே இருந்தார்.

தேர்தல் முடிவு நாஜிகளுக்கு இழப்புதான். சென்ற தேர்தலைக் காட்டிலும் 20 லட்சம் வாக்குகள் குறைவு. 34 இடங்கள் பறிபோயிருந்தன. ஆனால், இப்போதும் 196 இடங்களுடன் அதுதான் பெரிய கட்சியாக இருந்தது. ஆட்சி அமைக்கும் நாடகம் மீண்டும் தொடங்கியது. பாப்பென் ஓய்ந்துபோனார். அவரால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறமுடியவில்லை. “ஸாரி பிரசிடென்ட். என்னால் முடியவில்லை. வேறு ஏதாவது ஏற்பாடு செய்யலாமா என்று பாருங்கள்” எதிர்பார்த்தது போலவே ஹிட்லரை அழைத்தார் ஹிண்டன்பர்க். மீண்டும் தன்னைப் பிரதமராக்கும்படி கேட்டார் ஹிட்லர். மீண்டும் அவரது கோரிக்கையை மறுத்தார் ஹிண்டன்பர்க்.

ஆனால், இந்தமுறை நட்புரிமையோடு பேசினார். கூட்டணி அரசு அமைக்க ஒத்துழைப்பு தரவேண்டும்  என்றார். எல்லாவகையிலும் அவருக்கு உரிய பங்கு வழங்கப்படும் என்றார்.

 “நோ”

நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டு வந்தார் ஹிட்லர். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அறிக்கையுடன் போய் ஹிண்டன்பர்க்கைப் பார்த்தார் ஹிட்லர். “நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிட்டது. அமைச்சரவைக் குழுவின் தலைவராக என்ன நியமியுங்கள். நாட்டில் வேகமாக கம்யூனிஸம் பரவி வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த நாஜிகளால்தான் முடியும்”

 

jk



அறிக்கையின் சுருக்கம் இதுதான். ஆனால், ஹிண்டன்பர்க் இதற்கும் மறுத்துவிட்டார். முந்தைய நிலையிலேயே உறுதியாக நின்றார். அரசு இயந்திரம் முடங்கிப்போய் கிடந்தது. இந்தச் சமயத்தில் நாட்டின் மிக முக்கியமான தொழில் அதிபர்களும், வங்கி உரிமையாளர்களும், நிலச்சுவான்தார்களும் வர்த்தகர்களும் ஹிண்டன்பர்க்கைச் சந்தித்தனர். “ஹிட்லரை பிரதமராக்குங்கள். வியாபாரத்திற்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” அவர்களது கோரிக்கை ஹிண்டன்பர்க்கை மீண்டும் குழப்பியது. ஸ்லெய்ச்சரையும், பாப்பெனையும் அழைத்தார்.

“என்ன செய்யலாம் சொல்லுங்கள்” “நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடலாம். அவசர சட்டங்கள் மூலம் ஆட்சியை நடத்தலாம். ராணுவத்தையும் காவல்துறையையும் வைத்துக் கொண்டு அரசியல் கட்சிகளை ஒடுக்கிவிடலாம். மன்னராட்சிக் காலத்தைப்போல மேட்டுக்குடியினரையும் தொழில் அதிபர்களையும் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தலாம்”

“இதைத்தானே ஹிட்லர் வேறு பாணியில் சொல்கிறார். இதெல்லாம் சாத்தியமில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இந்தக் கேடுகெட்ட வேலை பெரிய தொல்லையாக இருக்கிறது” நொந்துபோய் சொன்னார் ஹிண்டன்பர்க். “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்”

திடீரென்று குண்டைத் தூக்கிப்போட்டார் ஸ்லெய்ச்சர். பாப்பெனுக்கு வியப்பு. “பாப்பெனுடைய திட்டத்தை ஏற்க முடியாது. கிரிகோர் ஸ்ட்ராஸர் தலைமையில், நாஜிக் கட்சியைப் பிளந்து பெரும்பான்மை ஆதரவுடன் நான் ஆட்சி அமைக்கிறேன். எனக்கு வாய்ப்பு அளியுங்கள்” ஹிண்டன்பர்க் காதில் வாங்கவில்லை. அவர் பாப்பெனுக்கு ஆதரவாக இருந்தார்.

“நீங்கள் அரசு அமைக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்” ஹிண்டன்பர்க் அறையிலிருந்து வெளியேறினார். பாப்பெனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார் ஸ்லெய்ச்சர். அடுத்தநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பாப்பெனுக்கு ராணுவம் ஒத்துழைப்பு வழங்காது என்று அறிவித்தார் ஸ்லெய்ச்சர். பாப்பென் ஆடிப்போய் விட்டார். மீண்டும் ஹிண்டன்பர்கிடம் ஓடிவந்தார். கன்னங்களில் கண்ணீர் வழிய நின்றார். “என் அன்பான பாப்பென். இப்போதைய நிலையில் உள்நாட்டுப் போர் உருவானால் அதற்கு பொறுப்பேற்கும் நிலையில் என் வயது இல்லை. ஸ்லெய்ச்சரின் அதிர்ஷ்டத்தையும் ஒருமுறை பார்த்துவிடலாம்”
என்று ஆறுதல் கூறினார் ஹிண்டன்பர்க்.
 

j



டிசம்பர் 2 ஆம் தேதி ஸ்லெய்ச்சர் பிரதமரானார். அதைத் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறத் தொடங்கின. கிரிகோர் ஸ்ட்ராஸரை ரகசியமாக சந்தித்தார் ஸ்லெய்ச்சர். துணை பிரதமர் பதவி, பிரஷ்யாவின் உள்துறை அமைச்சர் பதவி ஆகியவற்றை விட்டுத்தருவதாக உறுதியளித்தார். திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை பாப்பென் மூலம் தெரிந்துகொண்டார் ஹிட்லர். ஸ்ட்ராஸர் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர். அவரா இப்படிச் செய்தார். ஹிட்லரால் நம்ப முடியவில்லை. உடனே அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. கட்சியின் முக்கிய தலைவர்களும் வந்திருந்தனர்.

“இதோ பாருங்கள். உங்கள் வீம்பு, பிடிவாதம் ஆகியவற்றால் கட்சிக்குத்தான் இழப்பு. மூன்றே மாதங்களில் 20 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறோம். 34 இடங்களை பறிகொடுத்திருக்கிறோம். குறைந்தபட்சம் புதிய அரசுக்கு ஒத்துழைப்பாவது தருவதுதான் நல்லது”

ஸ்ட்ராஸரா இப்படிப் பேசுவது?

அவருடைய கருத்துக்கு கோயரிங்கும், கோயபல்சும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை ஹிட்லர் ஆதரித்தார். ஸ்ட்ராஸர் தனது அத்தனை பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து விட்டார்.
இதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போய் விட்டார். தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாக வெறிபிடித்தவர் போல துப்பாக்கியை எடுத்தார். மற்றவர்கள் சாந்தப்படுத்தினர்.

ஸ்ட்ராஸரின் ஆதரவு ஸ்லெய்ச்சருக்கு கிடைக்கவில்லை. அவர் ஏமாந்துவிட்டார். ஸ்ட்ராஸர் இத்தாலிக்குச் சென்றுவிட்டார். “ஜெர்மனி ஒரு ஆஸ்திரிய நாட்டவரின் கைகளுக்குப் போகப்போகிறது. அதுவும் கடைந்தெடுத்த பொய்யரிடம் சிக்கப்போகிறது” என்று எழுதினார் ஸ்ட்ராஸர். “கோயரிங்கிற்கு ஏதேனும் கிடைத்தால் போதும். வாயை மூடிக்கொள்வார்” இதுவும் ஸ்ட்ராஸரின் கருத்துதான். ஆனால், ஸ்ட்ராஸர் “செத்துப்போன சடலம்” என்று கோயபல்ஸ் எழுதினார்.

ஸ்ட்ராஸரின் பொறுப்புகளை தனது நண்பர் ருடால்ப் ஹெஸரிடம் ஒப்படைத்தார் ஹிட்லர். அதன்பிறகு அமைதியாகிவிட்டார். ஸ்லெய்ச்சரின் அரசுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றுதான் எல்லோரும் கருதினர். ஆனால், ஜனவரியில் மீண்டும் ஜெர்மன் தொழிலதிபர்கள் ஹிண்டன்பர்க்கை சந்தித்து ஹிட்லரை பிரதமராக்குங்கள் என்று வற்புறுத்தினர். அதைத் தொடர்ந்து பாப்பெனும் ஹிட்லரை ரகசியமாகச் சந்திக்க விரும்பினார். அந்தச் சந்திப்பின்போது, ஸ்லெய்ச்சரை பதவியிலிருந்து விரட்ட ஹிட்லருடன் ஒத்துழைப்பதாக தெரிவித்தார். ஹிட்லருக்கும் பாப்பெனுக்கும் சம மரியாதை இருக்கும் வகையிலான அரசு அமைக்கலாம் என்றார்.

இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட ஹிட்லர், தனக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதைத் தெரிந்துகொண்டவுடன் ஹிண்டன்பர்கிடம் ஓடிவந்தார் ஸ்லெய்ச்சர். பாப்பென் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக புலம்பினார். அவரை யாரும் நம்பவில்லை. யாருடைய ஆதரவையும் பெற முடியவில்லை. பாப்பெனை அழைத்துப் பேசினார். நடந்தவற்றை அறிந்தவுடன், மேற்கொண்டு பேசி முடிவுக்கு வரும்படி கூறினார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி ஹிண்டன்பர்கிடம் மன்றாடினார் ஸ்லெய்ச்சர். அவர் மறுத்துவிட்டார்.

“வேறு வேலையில்லையா?”

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, லிப்பி என்ற சிறிய மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நாஜிக் கட்சியினர் தீவிரமாக கவனம் செலுத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அங்கு குவிந்த நாஜிக் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரம் காரணமாக, கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்றனர்.

இதை நாஜிகள் ஊதிப்பெரிதாக்கினர். தங்கள் செல்வாக்கு அதிகரிப்பதாக பறைசாற்றினர். 1933 ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஹிண்டன்பர்கின் மகன் ஆஸ்கரும், பாப்பெனும் வங்கி உரிமையாளர் ஒருவரின் வீட்டில் சந்தித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், ஆஸ்கர் ஹிட்லரின் வாக்குறுதிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். இதற்குள் ஸ்லெய்ச்சர் தன்னால் முடிந்தவரை ஆதரவு கோரி அலைபாய்ந்தார். முடியவில்லை. கடைசியாக ஹிண்டன்பர்கிடம் வந்த அவர் மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி வேண்டினார். அவர் மறுத்துவிட்டார்.

ஜனவரி 30 ஆம் தேதி ஹிட்லரை வரவழைத்தார் ஹிண்டன்பர்க். பிரதமர் பதவியை அளிப்பது என்று   முடிவு செய்திருந்தார். அப்போது கடைசி நிமிட முட்டுக்கட்டை விழுந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் தலவைர் ஹியூஜென்பர்க், ஹிட்லருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “அவசரப்படாதீர்கள். ஹிண்டன்பர்க் தனது முடிவைத் தெரிவிக்கும் வரையாவது பொறுமையாக இருங்கள்.” ஹிட்லர் சாந்தமாகப் பேசினார். குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம். ஹிண்டன்பர்க் தனது அறையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தார். உடனே, ஹிண்டன்பர்க் வாழ்க என்று முழக்கமிட்டது கூட்டம்.

முக்கிய தலைவர்கள் ஹிண்டன்பர்க்கின் அறைக்கு வெளியே காத்திருந்தனர். வெளியே வந்த ஹிண்டன்பர்க், “உங்களை பிரதமராக நியமிக்கிறேன்” என்றார். மதியம் பதவி ஏற்பு நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. “ஜெர்மானியர்களின் நலன்களுக்காக எனது சக்தியை பயன்படுத்தி உழைப்பேன். ஜெர்மனியின் அரசியல் சட்டத்தையும், மக்கள் நலச்சட்டங்களயும் பாதுகாப்பேன். அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் அவர்களுக்குரிய நீதியையும் நிலைநாட்டுவேன்” இந்த வாசகங்களைக் கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். ஹிட்லரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். “நாம் சாதித்துவிட்டோம்” உணர்ச்சி கொப்புளிக்க கூறினார் ஹிட்லர். வெளியே காத்திருந்த மக்கள் திரள்  “ஹிட்லர் வாழ்க” என்று  கோஷமிட்டது.