Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: அவ்வளவு ரிஸ்க்லாம் இல்ல பாஸ்.. இது ரொம்ப சிம்பிள்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

digital-cheating-part-2

 

கால்பந்தாட்டத்துக்கு பெயர் போனது பிரேசில். கால்பந்தாட்டம் எனக்கு பிடிக்காது. நான் கிரிக்கெட் ரசிகர். அதனால் எனக்கு பிரேசில் தெரியாது என்பவர்களுக்கு, அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அதி அற்புத மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அற்புதமான தைலம் அல்லது அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அற்புத மருந்து என தொலைக்காட்சி சேனல்களில் இரவு 10 மணிக்கு மேல் வரும் விளம்பரங்களை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். அந்த அமேசான் மழைக்காடுகள் உள்ள நாடுதான் பிரேசில். 

 

பிரேசிலின் வடகிழக்கு மாநிலம் சியாரா. இந்த மாநிலத்தின் தலைநகரம் ஃபோர்ட்டலிசா. நாட்டின் பொருளாதார நகரங்களின் மையம் இந்நகரம். இங்கு நாட்டின் மத்திய வங்கியான ‘பாங்கோ சென்ட்ரல் வங்கி’யின் கிளை உள்ளது. இது நம்மூர் இந்திய ரிசர்வ் வங்கி போன்றது. மற்ற வங்கிகளுக்கு பணம் பிரித்து அனுப்பிவைப்பது இந்த வங்கியின் பணி. நூற்றுக்கணக்கான கோடி பணம் இங்கு ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும். 

 

2005 ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியாகினர். வங்கிக்குள் பணம் வைத்திருந்த வால்ட் என்னும் ஸ்டீல் லாக்கர் உடைக்கப்பட்டு பழைய ரூபாய் நோட்டுகள் மட்டும் திருடு போயிருந்தது; புதிய ரூபாய் நோட்டுகளை தொடக்கூட இல்லை. வங்கியின் வெளிக்கதவுகள் உடைக்கப்படவில்லை; சுற்றுச்சுவர்களை ஓட்டைப் போடவில்லை. பின் எப்படி உள்ளே வந்து வால்ட்டை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றார்கள் என்கிற சந்தேகம் எழுந்ததும், வங்கி முழுவதையும் வங்கி அதிகாரிகளும் செக்யூரிட்டிகளும் அலசி ஆராய்ந்தார்கள். 

 

digital-cheating-part-2

 

வங்கியின் உள்ளே, வெளியே நடப்பவற்றை பதிவு செய்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்க மானிட்டர் அறைக்கு சென்று ஒரு குழு. வங்கிக்குள் ஒரு ஓரத்தில் தரையில் பள்ளம் இருந்தது. 2.3 சதுர அடி பரப்பு கொண்ட அந்த பள்ளத்தில் டார்ச் அடித்து பார்க்க அது நிலத்தடி நீர் ஃபோர்வெல் குழாய் போல் போய்க்கொண்டே இருந்தது. பிரேசில் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டதும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கொள்ளை நடந்த வங்கிக்கு வந்தனர். ஒரு ஆள் மட்டுமே இறங்கக் கூடிய அந்த சுரங்கத்துக்குள் இரும்பு ஏணிப்படி அமைத்திருந்தனர். அந்த வழியாக தீயணைப்பு வீரர் இறங்கினார். உள்ளே இறங்கிச் சென்ற தீயணைப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிக்கு அதிர்ச்சி. அந்த சுரங்கப்பாதை போய்க்கொண்டே இருந்தது. கொஞ்சம் அகலமாகவும் இருந்தது. அந்த சுரங்கப்பாதையில் மின்சார வசதி, வென்டிலேட்டர், ஏசி பொருத்தப்பட்டு இருந்தன. அந்த பாதை 260 அடி தூரம் சென்று அதன்பின் மேலே ஏறியது. மேலே ஏறவும் இரும்பு ஏணிப்படியை பயன்படுத்தி இருந்தனர். அதன் வழியே ஏறிச்சென்றபோது அந்த இடம் வங்கிக்கு அருகில் உள்ள இரண்டாவது கட்டிடம். செயற்கை புல் தயாரிப்பு கம்பெனி. அந்த கம்பெனியில் யாரும் இல்லை. எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. 

 

காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு, இராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரிக்கத் துவங்கினார்கள். மூன்று மாதத்துக்கு முன்பு அந்த கட்டடத்தையும் காலியிடத்தையும் வாடகைக்கு எடுத்தார் பவுலோ செர்ஜியோ டிசோஸா. செயற்கை புல்தரை தயாரிக்கும் நிறுவனம் என போர்டு மாட்டப்பட்டது. உங்கள் வீட்டு தோட்டத்துக்கு தேவையான செயற்கை புல் தரை அமைத்து தருகிறோம் என அந்த நகர் முழுவதும் விதவிதமாக விளம்பரம் செய்தனர். அந்த கம்பெனிக்கு அடிக்கடி ஒரு கண்டெய்னர் லாரி வரும். சில பொருட்களை இறக்குவார்கள்; சில பொருட்களை ஏற்றுவார்கள்; சில மணி நேரங்களில் அது போய்விடும். இதுதான் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தது. இப்போது வங்கியை கொள்ளையடிக்கவே இப்படி ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பது தெரிந்து அந்நகர மக்களே அதிர்ந்து போயினர். 

 

digital-cheating-part-2

 

இந்த வங்கி கொள்ளையில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள்? பணத்தை எப்படி கொண்டு சென்றார்கள்? எனக் கண்டறிய வங்கி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை. வந்தவர்கள் யார் என்றும் தெரியாது. செயற்கை புல் கம்பெனி செயல்பட்ட இடத்தின் உரிமையாளரை அழைத்து காவல்துறை விசாரித்தது. இடத்தை வாடகைக்கு எடுத்து ஒப்பந்தம் போட்ட பவுலோ செர்ஜியோ டிசோஸாவின் அடையாள அட்டையை மட்டும் தந்திருந்தார். அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு அந்த கம்பெனியில் வேலை செய்தவர்கள் யார் எனத் தெரியவில்லை. பவுலோவின் அடையாள அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு தேடுதல் வேட்டையில் பிரேசில் போலிஸ் இறங்கியது.

 

வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது 71.6 மில்லியன் அமெரிக்க டாலர் (பிரேசில் மதிப்பில் 164 கோடியே 75 லட்சத்து 150 ரியால்) இந்திய மதிப்பில் 270 கோடி ரூபாய். வங்கி லாக்கரை உடைத்தபோது சத்தம் வெளியே வரவில்லை; அலாரம் அடிக்கவில்லை; சிசிடிவி காட்சிகள் பதிவு இல்லை. கைரேகை பதிவை அழிக்க சாக் என்கிற வெள்ளைநிற பவுடரை வங்கி முழுவதும் தூவிவிட்டுச் சென்றனர்.

 

கொள்ளை நடந்த மறுநாள் 10 கார்கள் மொத்தமாக பணமாக தந்து வாங்கியதையும், அந்த கார்களை ஒரு கன்டெய்னர் ட்ரக் வந்து ஏற்றிச் செல்வதையும் போலிசுக்கு தகவல் தந்தார் கார் டீலர். அந்த ட்ரக்கை மடக்கினர் போலிஸார். புதிய கார்களை செக் செய்தபோது, புதியதாக வாங்கப்பட்ட காருக்குள் கட்டுக்கட்டாக பணம் அடுக்கப்பட்டு இருந்தது. ட்ரக் ஓட்டுநர் சொன்ன பெயர்களின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கும் துறையின் கணிப்பொறியிலுள்ள பதிவுகளை பார்த்து கொண்டு பெயர்களை வடிகட்டியது. கொள்ளையடித்தவர்கள் தங்களது பெயர்களாக ஜெர்மன், பிக்பாஸ் என்கிற ஃபெர்னாண்டோ, யங் ஃபெர்னாண்டோ, அர்மடில்லோ என ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப்பெயர் வைத்திருந்தால் போலிஸ் குழம்பியது.

 

digital-cheating-part-2

 

2005 அக்டோபர் 9 ஆம் தேதி, கொள்ளைக்கு தலைமை தாங்கி ஸ்கெட்ச் போட்டு தந்த லூயிஸ் ஃபெர்னாண்டோ ரிபெய்ரோ துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருந்தார். அவரது உடல் ரியோ நகரத்துக்கு அருகில் சாலையின் ஓரம் கிடந்தது. இவனிடமிருந்து பணத்தை வாங்க அவனை கடத்தி வைத்து அவனது குடும்பத்தை மிரட்டியுள்ளார்கள். 89,300 ரியால் பணத்தை தந்தபின் அவனை விடுவிப்பதற்கு பதில் துப்பாக்கிகளுக்கு பலியாக்கினர். கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்றவற்றை அவனது குடும்பத்தார் போலிஸாருக்கு சொல்லவில்லை. கொலைக்குப் பின் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் படுகொலை, மற்றவர்கள் என்னவானார்கள என்பது இதுவரை தெரியவில்லை. கைதானவர்கள் ஒருவருக்கொருவர் வேலைக்கு சேருவதற்கு முன்பு வரை அறிமுகமில்லாதவர்கள். இவர்களை ஒன்றிணைத்தது பவுலோ. கைதானவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 7 மில்லியன் ரியால் மட்டுமே மீட்கப்பட்டது, 64 மில்லியன் ரியால் தொகை மீட்கப்படவேயில்லை.

 

இந்த கொள்ளையை நடத்தி முடிக்க, அதாவது போலி புல் தரை கம்பெனி தொடக்கம், சுரங்கம் அமைத்தது, பொருட்கள் வாங்கியது என 2 லட்சம் டாலர் ரூபாய் செலவு செய்திருப்பார்கள் என்கிறது பிரேசில் புலனாய்வுத்துறை. இப்படி திட்டம் போட்டு மாதக்கணக்கில் காத்திருந்து கொள்ளையடித்தவர்கள் மீது இப்போது கொலை வழக்குகளும் உள்ளன.

 

இந்த டீம் ஏமாந்தது ஒரே நேரத்தில் 10 கார்களை மொத்தமாக பணம் தந்து வாங்கியதாலே. சிக்கியவர்கள் தங்களை காட்டித்தந்துவிடுவார்கள் என்பதாலே அடுத்தடுத்து முக்கியமானவர்களை கொலை செய்து, தொடர்பு செயின் லிங்க்கை அறுக்க முயன்றதால் அது சீரியல் கொலைகளாக மாறியது. சிக்கியவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 17 ஆண்டுகளை கடந்தும் வழக்கு நடக்கிறது. உலகின் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை என கின்னஸ் புத்தகத்தில் பதிவு பெற்ற இந்த சம்பவம் ஃபெடரல் பேங்க் ஹெய்ஸ்ட் (Federal Bank Heist) என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.

 

எதற்கு இந்த வரலாறு இங்கே எனக் கேட்பது புரிகிறது. 

 

தொடக்கத்திலிருந்து மீண்டும் படியுங்கள். வங்கியைக் கொள்ளையடிக்க எவ்வளவு தெளிவாக ஸ்கெட்ச் போட்டுள்ளார்கள். வங்கியின் ப்ளுபிரிண்ட் பெற்றுள்ளார்கள். அதற்கு அருகில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்கள். அங்கிருந்து எந்த திசையில், எவ்வளவு தூரம் சுரங்கம் அமைக்க வேண்டும், வங்கி லாக்கரை உடைக்கும்போது சத்தம் வராமல் இருப்பது எப்படி, சிசிடிவி கேமராவில் கொள்ளை சம்பவம் பதிவாகாமல் இருப்பது எப்படி, 3.6 அடி கனமான இரும்பு காங்கிரீட் தளத்தை உடைத்து உள்ளே புகுவது எப்படி, 3.5 டன் பணத்தினை எப்படி மேலே கொண்டு வருவது, கைரேகைகள் கூட பதிவாகமால் இருக்க பவுடர் தூவியது, சுரங்கம் தோண்டும்போது உள்ளே அனல் அதிகமாக இருக்கும், அதனால் அதற்கு ஏசி பொருத்த வேண்டும், மின்விளக்கு வசதி வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்கள். சிக்கிக்கொள்ளும் நிலை வந்தால் கொள்ளை சம்பவத்தில் முக்கிய மூளையாக இருந்தவர்களை கொலை செய்வது எப்படி என யோசித்து திட்டமிட்டு கொள்ளையை நடத்தியுள்ளார்கள். 

 

digital-cheating-part-2

 

இப்படி திட்டம் போட்டு லட்சங்களில் செலவு செய்து திருடுவதற்கு பதில், ஒரே ஒரு செல்போன் இருந்தாலே நாங்கள் தினமும் ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை சம்பாதிப்போம் என்கிறார்கள் இந்த பாமரர்கள் (தற்போதைய டிஜிட்டல் கொள்ளையர்கள்).

 

என்னது பாமரர்களா? ஆமாம், அவர்கள் படிக்காத பாமரர்கள்தான். ஆனால், இன்று கோடீஸ்வரர்கள். டிஜிட்டல் மோசடியில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள், டிஜிட்டல் இந்தியாவில். யார் அவர்கள்?

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்… 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; இரண்டு நிமிட ஃபோன் காலில் நம்மை ஏமாற்றுவது யார்?  பகுதி – 01