முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
ஒரு பெண் எனக்குக் கால் செய்து வந்து என் கணவர் ஏதோ தவறு செய்கிறார். அது என்னவென்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள் என்றார். சரி அலுவலகத்திற்கு வந்து நடந்ததைச் சொல்லுங்கள் என்று அழைத்தோம். இங்கு வந்து நானும் என் கணவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். பின்பு இருவரும் சேர்ந்து ஒன்றாகத் தொழில் தொடங்கினோம் அது கொரோனா தொற்று காலத்தில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. தொழில் தொடங்கியதற்காக வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை இப்போது நான் மாத வருமானத்திற்கு ஒரு இடத்தில் வேலை செய்து வருகிறேன். என் கணவர் வேலை இல்லாமல் இப்போதுதான் அவருக்கு வேலை கிடைத்துள்ளது என்றார்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசும்போது, கணவர் தவறு செய்து வருவதாகச் சந்தேகம் உள்ளது என்றார். இப்போது எந்த இடத்தில் தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அம்மா வீட்டில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும் என்னுடைய குழந்தைகள் பள்ளிக்கும் அப்பா வேலைக்கு செல்வதாகக் கூறினார். கணவர் மீது ஏன் சந்தேகம் என்று கேட்டபோது, சரியாகத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று உறுதியாக சொல்லி அது யார் என்று கண்டுபிடிக்கச் சொன்னார்.
அதன் பிறகு நாங்கள் அந்த பெண்ணின் கணவரை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தோம். அந்த நபர் வேலைக்கு செல்வதும் வீட்டிற்கு வருவதுமாக சுழற்சி முறையில் அவரது நடவடிக்கை இருந்தது. பின்பு அவரது அலுவலகத்தில் விசாரித்தபோது வேறோருவருடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியே 15 நாட்களுக்கு மேல் சென்றது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்த என்னுடைய ஆட்களைக்கூட மாற்றிப் பார்தேன் அப்படியும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
வேறு கோணத்தில் கண்காணித்தபோது ஒரு வழியாக அவர் செய்யும் தவறை நெருங்கிவிட்டதாக உணர்ந்தோம். அதை உறுதிப்படுத்த அந்த பெண்ணிடம் நாங்கள் கண்டுபிடித்ததைச் சொல்வதற்கு முன்பு நேரில் அழைத்து விசாரித்தோம். அப்போது நாங்கள் யூகித்தது சரியாக இருந்துள்ளது. பின்பு உன்னுடைய அம்மாவுடன்தான் உன் கணவர் தொடர்பில் இருப்பதாக அந்த பெண்ணிடம் கூறினோம். அந்த பெண்ணுக்கு முன்பே இது பற்றிய சந்தேகம் இருந்ததால்தான் அதைத் தீவிரமாக விசாரிக்க எங்களிடம் வந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரிந்தது. அந்த பெண்ணிடம் உன் குழந்தையை அழைத்து அங்கிருந்து சென்றுவிடு இல்லையென்றால் என்றைக்காவது ஒரு நாள் இந்த விஷயம் உன் குழந்தைக்குத் தெரிந்து அதுவே அந்த குழந்தைக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்.