சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் பிரபலமான கிரிக்கெட் ஜாம்பவான். உலக அளவில் பல சாதனைகளைப் படைத்தவர். இந்திய ஆண்கள் கிரிக்கெட்டையும், உலக கிரிக்கெட்டையும் அதன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர். ஆண்கள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, அவருக்கு இணை அவர்தான். மகளிர் கிரிக்கெட்டிலும் இப்படி ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் மித்தாலி ராஜ். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்.

14 வயதில் 1997 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால் இறுதியாகப் பங்கேற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 1999-ல் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தான் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணிக்கு எதிராக 114* ரன்கள் குவித்து, தனது கிரிக்கெட் பயணத்தைச் சாதனையுடன் தொடங்கினார். 19 வயதில் தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 214 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதனைகள் படைத்தார்.
ஒன்று இரண்டல்ல. அவர் படைத்த சாதனைகள் ஏராளம். 1999 முதல் தேசிய அணியில் உள்ள இவர், இன்றும் இந்திய அணியின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் கிரிக்கெட் விளையாடி வருபவர். இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ். இவர் 19 வருடங்கள் (1997-2016) சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்றவர்.

அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பெருமையும் மித்தாலி ராஜ்க்கு உண்டு. இதுவரை 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6550 ரன்கள் எடுத்து, உலக அரங்கில் அதிக ரன்கள் எடுத்த மகளிர் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5992 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் 7 சதங்கள், 51 அரை சதங்கள் அடித்துள்ளார். 50 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து சாதனை புரிந்துள்ளார். பேட்டிங் சராசரி 51.17.
10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி ராஜ், 1 சதம், 4 அரைசதம் உட்பட 663 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 51. 85 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 2283 ரன்கள் அடித்துள்ளார். இதில் 17 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 37. டி20-ல் அதிக பேட்டிங் சராசரி கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டி20-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரின் சிறப்பையும் வெளிபடுத்தியவர் மித்தாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் அதிகம் பிரபலமான வீரர் மித்தாலி ராஜ். லேடி கிரிக்கெட்டின் சச்சின் எனப் போற்றபடுபவர். இதுவரை ஐந்து ஒருநாள் உலககோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஆகவும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். 2005 உலககோப்பை போட்டிகளில் இறுதி போட்டிவரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர். இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை வென்றது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாக உள்ளது. 2016-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 தொடரைக் கைபற்றித் தனது சிறந்த கேப்டன்ஷிப் திறமைகளை வெளிபடுத்தினார்.
6 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜ் 3 வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ளார். அதிக வெற்றி சதவீதம் உள்ள இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன். 3 டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே இந்திய டெஸ்ட் கேப்டன் இவர். 76 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றி 42 வெற்றிகளைத் தந்துள்ளார். வெற்றி சதவீதம் 57.
2003-ல் அர்ஜுனா விருதும், 2015-ல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். பி.பி.சி.-ன் உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் 2017 ஆம் ஆண்டு இவர் இடம் பிடித்தார். மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமாக்க ஏற்பாடுகள் நடந்து வருவது குறிபிடத்தக்கது. நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறை பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த ரோல் மாடலாக உள்ளார்.