இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை (26.11.2023) கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் தடுமாறினாலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது.
இந்திய அணி அனுபவமில்லாத வீரர்களை நிறைய கொண்டிருந்த போதிலும், அந்த இளம் வீரர்களை வைத்தே அதிகபட்ச வெற்றிகரமான டி20 ரன்னை சேஸ் செய்தது. இது இந்திய இளம் வீரர்களிடையே முழு நம்பிக்கையை கொடுத்துள்ளது. முகேஷ் குமாரின் துல்லியமான டெத் ஓவர் பந்துவீச்சு, ரிங்கு சிங்கின் பினிஷிங், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டது. ஆனால் கேப்டனாக பந்து வீச்சை சீர்படுத்தும் பணி சூர்யாவின் முன் உள்ளது. பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும். அதுபோக போன ஆட்டத்தில் மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆகினர். அந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் இங்லிஷ், டிம் டேவிட் என இரு அதிரடி வீரர்கள் உள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். டிம் டேவிட்டின் ஐபிஎல் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலம். பவுலிங்கில் ஆஸி வீரர்கள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், உலகக் கோப்பை இறுதி போல எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பும் வல்லமை படைத்த அணி. ஒவ்வொரு போட்டியையும் சவாலாக ஏற்று திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே சிறப்பான அணியாக ஜொலிக்க முடியும்.
திருவனந்தபுரம் ஆடுகளம் மெதுவாகத் திரும்பும். எனவே சுழற்பந்துக்கு அதிகம் சாதகமாக இருக்கும். திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்த போதிலும் நாளை போட்டியன்று மழைக்கான வாய்ப்பு குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டி நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்க உள்ளது.
- வெ.அருண்குமார்