2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ரன்னை சிக்ஸரால் அடித்துமுடித்த பின்பு, சிலைபோல சில நொடிகள் நிற்பார் கேப்டன் தோனி. வெற்றியின் ஆழமான உணர்வை அந்த சில நொடிகளின் மூலம் பதிவுசெய்திருப்பார். எப்போதும் ஹோஸ்ட் செய்யும் அணி உலகக்கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறு அன்று மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியை தனக்கே உண்டான பாணியில் வழிநடத்திச் சென்றாலும், நடப்புச் சாம்பியனான இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய அணி தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தோனியின் சில சறுக்கலான ஆட்டங்களைக் காண்பித்து அவர் ஓய்வுபெற வேண்டிய தருணமிது என குரல்கள் எழுகின்றன.
உலகில் வேறெந்த கேப்டனும் நிகழ்த்த முடியாத சாதனைகளை செய்துகாட்டிய தோனி, சரியான நேரத்தில் அந்தப் பொறுப்பை விராட் கோலிக்கு விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி, அவருக்கு உறுதுணையாகவும் களத்தில் நிற்கும்போது ஏன் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன? அவ்வவப்போது இதுபோன்ற கருத்துகள் மேலோங்கினாலும், அடுத்த உலகக்கோப்பை வரை நான் அணியில் இருப்பேன் என்ற தோனியின் கருத்தே அதற்கு பதிலாக முன்வைக்கப்படுகிறது. ஏன் அடுத்த உலகக்கோப்பை வரை தோனி அணியில் இருக்கவேண்டும்? என்ற கேள்வியை எப்போதும் தோனியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் ரசிகர் ஒருவரிடம் முன்வைத்தபோது அவர் சொன்ன ஐந்து காரணங்கள்..
வேகம் குறையாத கால்கள்
முரட்டுத்தனமான உடல்வாகு கொண்ட தோனி சிக்ஸர்கள் பறக்கவிடுவது யாவரும் அறிந்ததுதான். அதேசமயம், விக்கெட்டுகளுக்கு மத்தியில் வேகத்தைக் காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. 24 வயது வீரர் ஹர்தீக் பாண்டியாவுடன் ஓடும்போதும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராவோவிடம் போட்டியிடும்போதும் தோனியின் வயது வெறும் நம்பராக மட்டுமே தெரியும். தோனிக்கு வயதாகிவிட்டது என்று சொல்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.
ஆட்டத்தை முடித்துவைப்பதில் நம்பர் ஒன்
தோனிக்குள் ஒளிந்திருக்கும் ஃபினிஷரைக் காணவில்லை என்று பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் பேசிய அதே வர்ணனையாளர்கள்தான், பெங்களூருக்கு எதிரான போட்டியில் கோரே ஆண்டர்சனின் பந்தை சிக்ஸராக மாற்றி வெற்றிபெற்றபோது கொண்டாடினார்கள். கடைசி ஓவரின் கடைசி பந்தை வீசும் பவுலரின் இதயத்திற்குள் கிலி கிளப்புவதில் தோனிதான் எப்போதும் மாஸ்டர்.
விராட் கோலியின் நிழலாய்
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அவரது கேப்டன்ஷிப்பை அருமையாக செய்துகாட்டினார். பந்துவீசுபவரை மாற்றிக்கொண்டே இருந்து பேட்ஸ்மெனைக் குழப்பிவிட்டு விக்கெட் எடுப்பதில் கெட்டிக்காரர். ஆனால், லிமிடெட் ஓவர்களில் இன்றும் விராட் கோலியின் சுமைகளில் பாதியை தாமாகவே தோனி எடுத்துக்கொள்ள, அதை அவரும் அனுமதிக்கிறார். பல சமயங்களில் இந்தக் கூட்டணி அதற்கான நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறது.
தலைசிறந்த விக்கெட் கீப்பர்
தற்போதைய நிலையில் உலக அளவில் ஸ்டம்புக்குப் பின்னால் வேகமாக செயல்படக் கூடிய கீப்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்டிலும் தோனியே முதலிடத்தில் இருப்பார். தோனி பின்னாலிருக்க களத்தில் நிற்கும் பேட்ஸ்மேன் இறங்கி ஆட யோசிப்பார். ரன்அவுட் சமயங்களிலும் சமயோதிஜமாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்துவதில் தோனியை விட சிறந்த கெட்டிக்காரர் இன்றளவிலும் இல்லை என்றே சொல்லலாம்.
இளம் வீரர்களுக்கு வழிகாட்டி
களத்திலும், களத்திற்கு வெளியேயும் இளம் வீரர்களுக்கு தேவையான அட்வைஸை வழங்க, அணியில் ஒரு அனுபவம்வாய்ந்த வீரர் கட்டாயம் தேவை. அதை தோனி மிகச்சரியாக பூர்த்தி செய்கிறார். வளர்ந்துவரும் இளம்வீரர்களில் பலர் இதை உலகிற்குக் கூறியிருக்கின்றனர்.
அடுத்துவரும் காலங்களில் அணியில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் இளம்வீரர்களை வழிநடத்த நிச்சயம் தோனியின் அனுபவம் பயன்படும் என்று விராட் கோலியே செய்தியாளர்கள் மத்தியில் சொல்லியிருக்கிறார்.
தனது ஓய்வை யாருடைய உந்துதலும் இன்றி தோனியே தீர்மானிப்பார். கடந்தகாலங்களில் அவரே அதை சொல்லியிருக்கிறார்.