சென்ற ஆண்டின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது சுனில் சேத்ரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் சார்பில், சென்ற ஆண்டில் கால்பந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிரிவுவாரியாக விருதுகளை அறிவித்தது. அதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளைச் சேர்ந்த ஏழு பேரை விருதுக்காக தேர்வு செய்துள்ளது.
33 வயதான கேப்டன் சுனில் சேத்ரி, 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகளிர் அணியைச் சேர்ந்த 26 வயதான கமலா தேவி, சிறந்த வீராங்கனைக்கான விருதினைப் பெறுகிறார். கிராஸ்ரூட் டெவலெப்மெண்ட் விருது கேரளாவுக்கும், ஆடவர் இளம் வீரர் விருதினை அனிருத் தப்பாவும், மகளிர் இளம் வீராங்கனை விருது பந்தோயிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனில் சேத்ரி இந்திய அணிக்கு நீண்டகாலமாக தலைமை தாங்கிவருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இண்டெர்காண்டினெண்டல் கோப்பை தொடரில், இந்திய அணியை வெற்றி பெறச்செய்தார். வெளிநாட்டு கிளப் அணிகள், வெளிநாட்டு அணிகள் மீது அதிகம் ஆர்வம் செலுத்தும் இந்தியர்கள், இந்திய அணிக்கும் ஆதரவளிக்க வேண்டும் என சுனில் சேத்ரி வேண்டிக்கொண்டதன் விளைவாக, மும்பையில் நடந்த போட்டியின்போது மைதானத்தில் ரசிகர்கள் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.