இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக கங்குலிக்குப் பிறகு பெரிதும் புகழப்பட்டவர் தோனி. இந்திய அணியை அதீத உச்சத்திற்கு கொண்டு சென்றதோடு, உலகக்கோப்பை உள்ளிட்ட ஐசிசி கோப்பைகள் அத்தனையையும் வென்று தந்தவர் அவர். அதிகம் வாய்திறக்காமல், அதேசமயம், களத்தில் பொறுப்பான தலைமையாக இருந்த தோனி, 2014-ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பைத் துறந்தார்.
அதேபோல், 2017-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு பிசிசிஐ செய்யும் அரசியல்தான் காரணம் என பரவலாக பேசப்பட்டது. தோனியும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. அதன்பிறகு இந்திய கேப்டனாக கோலி பொறுப்பேற்றுக் கொண்டார். தோனி விக்கெட் கீப்பராகவே அணியில் நீடித்து வருகிறார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக துபாய் செல்லும் முன் ராஞ்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தோனி, தான் ஏன் கேப்டன் பதவியைத் துறந்தேன் என மனம்திறந்திருக்கிறார். “2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்பாக புதிய கேப்டன் தனக்குக் கீழான அணியை உருவாக்க வேண்டும். சக வீரர்களின் மனநிலையைப் படிக்க வேண்டும். அதனாலேயே கேப்டன் பதவியைத் துறந்தேன். இந்தக் கால அவகாசம் இல்லையென்றால், அது புதிய கேப்டனுக்கும், அணிக்கும் நெருக்கடியைத் தந்துவிடும். அணியின் நன்மை என்ற நோக்கம் மட்டுமே அதில் இருந்தது” என தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து, “இங்கிலாந்து தொடருக்கு முன்னர் இந்திய அணி பயிற்சிப் போட்டிகளைத் தவறவிட்டது. அதுவே, நம் வீரர்கள் சூழலுக்கேற்ப விளையாட முடியாமல் திணறக் காரணமாக அமைந்தது. தோல்வியும் கிடைத்தது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம் என்பதால் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இருந்தாலும், இந்திய அணிதான் இன்னமும் நம்பர் ஒன் என்பதை மனதில் கொள்ளவேண்டும்” என புன்னகைத்தப்படி முடித்துக்கொண்டார்.