உத்தரப் பிரதேம் மாநிலம் பிரயாக்நாஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கும்ப மேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள், கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 10 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சர்களோடு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவர்களுடன் அரசு அதிகாரிகளும் புனித நீராடினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பெங்களூர் அணியான ஆர்சிபி அணியின் ஜெர்சியை ரசிகர் ஒருவர் திரிவேணி சங்கமத்தில் நனைத்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவில், ஆர்சிபி ஜெர்சியை வைத்திருந்த ரசிகர் ஒருவர், மிகுந்த பயபக்தியுடன் புனித நீரில் மூன்று முறை நனைக்கிறார். ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ரசிகர் தனக்குப் பிடித்தமான ஆர்சிபி ஜெர்சியை புனித நீரில் நனைத்து வேண்டுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த தொடர்பான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஆர்சிபி இந்த முறை கண்டிப்பாக ஜெயிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்களான விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஏபிடி வில்லியர்ஸ் உள்ளிட்ட புகழ் பெற்ற வீரர்கள் இருந்த போதிலும், ஐபில் தொடரில் ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் மற்ற அணி ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.