Skip to main content

தோனியை ஏன் முன்னரே இறக்கவில்லை..? ரவி சாஸ்திரி புதிய விளக்கம்...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

ravi shastri clears about dhonis placement controversy in worldcup semifinal

 

 

7 ஆவது இடத்தில் இறங்கிய தோனி களத்தில் இருந்தபோது எப்படியும் வென்றிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது அவரின் ரன் அவுட் . அரை சதம் அடித்த அவர், ரன் அவுட் ஆனபோது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது.

இந்நிலையில் தோனி இறக்கப்பட்ட இடம் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான ஒன்றாக பலரால் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தற்போது விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "தோனியை முக்கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனியை முன்கூட்டியே களமிறக்கி, அவர் அவுட்டாகியிருந்தால், இந்தியா அணி அப்போதே தோற்றிருக்கும். எனவே அணியில் உள்ள அனைவரும் தோனியை இறுதியில் தான் இறக்குவது என்பதில் உறுதியாக இருந்தோம்.

அவர் ஒரு மாபெரும் ஃபினிஷர். ஆகவே அந்த வகையில் அவரை பயன்படுத்தாமல் இருந்தோமானால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும். பந்த் மற்றும் பாண்டியாவை இழந்த பிறகும் சரணடையாமல், போராடினோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி எப்போதும் போல அபாரம்தான். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் அவர் மண்டைக்குள் அனைத்து கணக்கீடுகளும் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கும்.

எந்தப் பந்தை அடிக்க வேண்டும், ஜேம்ஸ் நீஷம் கடைசி ஒவரில் எவ்வளவு அடிக்க முடியும் என்பதையெல்லாம் அவர் முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருந்திருப்பார். அவர் ஆட்டத்தை முடிக்க மிகவும் முனைப்புடன் இருந்தார், அவரது தீவிரம் அவரது உடல் மொழியில் தெரிந்தது" என கூறியுள்ளார்.