Skip to main content

இந்தியா - பாக் போட்டிக்கு சிக்கல்... அரசியல்வாதிகள் எதிர்ப்பு - பிசிசிஐ சொன்ன பதில்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

india vs pak

 

ஜம்மு காஷ்மீரில், இம்மாத தொடக்கத்திலிருந்தே தீவிரவாதிகள் குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதுவரை 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

இந்த தொழிலாளர்களின் கொலைக்குப் பொறுப்பேற்றுள்ள லஷ்கர்-இ-தொய்பா சார்பு இயக்கமான ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பயங்கரவாத குழு, ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு புலம்பெயர் தொழிலாளர்களை எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் உயிருக்குப் பயந்து ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் மக்களைக் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதலுக்குப் பல்வேறு தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

இந்தநிலையில், பொதுமக்கள் கொலை செய்யப்படுவதற்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடக்கூடாது என வலியுறுத்திவருகின்றனர்.

 

இதுதொடர்பாக பீகார் மாநில துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், "இதுபோன்ற விஷயங்கள் (இந்தியா - பாகிஸ்தான் போட்டி) நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தால் இந்தியா எந்த விஷயத்திலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்காது என்ற செய்தி கிடைக்கும்" என கூறியுள்ளார்.

 

அதேபோல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "(இரு நாடுகளுக்கும் இடையேயேயான) உறவுகள் சரியாக இல்லையென்றால், இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

 

பாஜகவைச் சேர்ந்த எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "பயங்கரவாதத்தின் விற்பனையாளர் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்த என்ன அவசரம்? பிசிசிஐயின் ஜெய் ஷாவுக்கு அவரது தந்தை உள்துறை அமைச்சராக என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? துபாய் தாதாக்களுக்குப் பந்தயம் கட்டி பணம் சம்பாதிப்பதற்கு கிரிக்கெட் விளையாடுவது கட்டாயமாகும். எனவே இந்தக் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்து நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்றுங்கள்" என தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் பிசிசிஐயின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தொடர் என்பதால் பாகிஸ்தானோடு விளையாட மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கொலைகளை நங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டியைப் பொறுத்தவரை (இந்தியா - பாகிஸ்தான்) ஐசிசியின் சர்வதேச உறுதிமொழியின் கீழ், யாருக்கும் எதிராக விளையாட முடியாது என மறுக்க முடியாது. நீங்கள் ஐசிசி போட்டிகளில் விளையாடித்தான் ஆக வேண்டும்"  என கூறியுள்ளார்.

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story

தோனியின் அடையாளம் இனி யாருக்கும் கிடையாது.. என்ன செய்திருக்கிறது பி.சி.சி.ஐ?

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
No one knows Dhoni's identity anymore.. What has BCCI done?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க காலத்தில் ரயில்வேயில் டிடிஆர் ஆக பணியாற்றிய தோனி, பிறகு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் தோல்வியை மட்டும் சந்தித்த தோனி, அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடி தனது கடும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டன் வரை வளர்ந்தார். 

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய உலகக்கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது. அதன் காரணமாகவே, தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், ‘கூல் கேப்டன்’, ‘பெஸ்ட் ஃபினிஸர்’ எனவும் ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி, கேப்டனாக தலைமையேற்று 4 கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும், பல தொடர்களில் இந்திய அணிக்காக வெற்றிகளை வாரி வழங்கியுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதலே தோனி ஜெர்ஸி எண் 7ஐ அணிந்து விளையாடி வந்தார். தோனி பிரபலமடைந்ததைப் போல, அவருடைய ஜெர்ஸி எண்ணும் பிரபலமடைந்தது. தோனியின் ஜெர்ஸி நம்பரான ‘7’ ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் கொண்டிருந்தது. இதனையடுத்து, பல சாதனைகளை படைத்த தோனி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்றிருந்த போதிலும், அவருடைய ஜெர்ஸி நம்பரான 7 இதுவரை எந்த வீரருக்கு அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தோனியின் ஜெர்ஸி நம்பர் ‘7’க்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டிற்கு, முன்னாள் கேப்டன் தோனி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், ‘7’ஆம் நம்பர் பொறித்த ஜெர்ஸியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் இனி பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக முன்னாள், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில், அவரது 10ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிசிசிஐ ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.