உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழுக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்தை இந்தியா வெற்றி பெற்றதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது ஒரு அற்புதமான குழு முயற்சி, அங்கு அனைவரும் பங்களித்தனர். களத்தில் அர்ப்பணிப்பும் திறமையும் முன்மாதிரியாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.