இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஏற்கெனவே நடைபெற்ற டி20 தொடரில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று, சமநிலையில் இருந்தன.
இந்நிலையில், தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று லீட்ஸ் பகுதியில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, விராட் கோலி மட்டும் 71(72) ரன்கள் எடுத்திருந்தார். சிகர் தவான் 44 (49), தோனி 42 (66) ரன்கள் என எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட் மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. ஜோ ரூட் 100 ரன்களும், கேப்டன் மோர்கன் 88 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம், 2 - 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி சமநிலையில் இருப்பதற்காக இந்தத் தொடரை பயன்படுத்த நினைத்தது. ஆனாலும், யாரை எந்த இடத்தில் இறக்குவது என்ற குழப்பமே நீடிக்கிறது.
போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் விராட் கோலி, ‘இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற அணியைப் போல இங்கிலாந்து வீரர்கள் விளையாடினார்கள். 25 - 30 ரன்கள் குறைவாக இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்திருக்கிறது. அவர்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சிறப்பாக தொடங்கினாலும், அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. புவனேஷ்வரின் முழுமையான திறமை வெளிவரவேண்டும். ஸ்ரதுல் தாகூர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஒருசிலரை மட்டுமே நம்பிருப்பது அணிக்கு ஆரோக்கியமாக இருக்காது. இந்தத் தவறுகளை சரிசெய்துகொள்ளவில்லை என்றால், அணி நிர்வாகம் அதன் முடிவுகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.