பாகிஸ்தானில் நிலவிவந்த அரசியல் குழப்பங்கள், சூழல் மாற்றங்களை சரியாகப் பயன்படுத்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரது பாகிஸ்தான் தெகிரிக்-இ-இன்சாஃப் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இம்ரான் கானைப் போல இலங்கை வீரர் குமார் சங்கக்காராவும், இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றும், தேர்தல் வியூகங்களை அவர் வகுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. இலங்கையில் ஆளும் அரசுக்குள் விரிசல் ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தும் நோக்குடன் சங்கக்காரா இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன. இந்த செய்தி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட, குமார் சங்கக்காரா இதற்கு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இதுபோன்ற எதிர்பார்ப்புகளையும், வதந்திகளையும் ஒருபோதும் நம்பவேண்டாம். அரசியலில் நுழைவது என்ற எந்தவிதமான ஆசையோ, லட்சியமோ எனக்கு இருந்ததில்லை. இதை மிக உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வதந்திகளில் உண்மையில்லை” என தெரிவித்துள்ளார். இலங்கையில் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் இருப்பது புதிதல்ல. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா, சானத் ஜெய்சூர்யா போன்றோர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.