இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி குறித்து குல்தீப் யாதவ் தெரிவித்த கருத்து அவருக்கே தலைவலியாக மாறியுள்ளது.
விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், போட்டியின் போது தோனி வழங்கும் ஆலோசனை பற்றி கேட்டபோது, ‘’ அவர் தேவையில்லாமல் மைதானத்துக்குள் பேசமாட்டார். ஏதும் சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடையே சொல்லுவார். அப்போது அவர் சில டிப்ஸ்களை கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ்கள் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
அவரின் இந்த கருத்துக்கு தோனி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தோனி எடுக்கும் முடிவுகள் அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடி தந்திருப்பதாக பல சர்வதேச வீரர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோல "தோனி அணியில் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை" என தற்போதைய இந்திய அணி கேப்டன் கோலியும் தெரிவித்துள்ளார். துணை கேப்டன் ரோகித் சர்மா உட்பட பல வீரர்களும் தோனியின் ஆலோசனை தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்து வரும் நிலையில் குல்தீப்பின் இந்த கருத்து இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.