16 ஆவது ஐபிஎல் தொடரின் 60 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் - ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 55 ரன்களையும் மேக்ஸ்வெல் 54 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் ஆசிஃப், ஜாம்பா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சந்தீப் சர்மா 1 விக்கெட்டை கைப்பற்றினார். 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூர் அணியில் பேர்னல் 3 விக்கெட்களையும் கரண் சர்மா, ப்ரேஸ்வெல் தலா 2 விக்கெட்களையும் மேக்ஸ்வெல், சிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஜாம்பா பந்துவீச்சில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் இதுவரை 16 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் அல்லாது அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 104 கேட்சுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா 109 கேட்சுகளுடன் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் 4 முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ஜாஸ் பட்லரும் இணைந்துள்ளார். அவர் இன்றைய போட்டியுடன் சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
இன்றைய போட்டியில் 59 ரன்களை மட்டும் எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் பெங்களூர் அணிக்கு எதிராக 2009 ஆம் ஆண்டில் 58 ரன்களை எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை ராஜஸ்தான் அணி இன்று பதிவு செய்துள்ளது.