டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.
இந்தநிலையில், இன்று (03.08.2021) நடைபெற்ற ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் பெல்ஜியமும் மோதின. இதில், பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க, அந்த அணி 5 - 2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் இந்திய அணி வெண்கல பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
இன்று மாலை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில், ஆஸ்திரேலியா - ஜெர்மனி அணிகள் மோதவுள்ளன. அப்போட்டியில் தோல்வியடையும் அணியுடன் இந்தியா வெண்கல பதக்கத்திற்காக மோதும். இதற்கிடையே 62 கிலோ ஃபிரீ-ஸ்டைல் குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக், மங்கோலியாவின் போலோர்டுயா குரேல்குவிடம் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி, தகுதிச் சுற்றில் 14வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை இழந்தார்.