இந்தியா தலைமையேற்று நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட ஓரிரு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துமா?
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா இந்த ஆண்டு நடத்தவுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி வருகிற ஞாயிறு, சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க, சமீபத்தில் தான் இருதரப்பு வீரர்களும் சென்னை வந்திறங்கி பயிற்சி செய்து வருகின்றனர். இந்தியா தனது முதல் ஆட்டத்தை விளையாட இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்தநிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு பாசிடிவானது, அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. கில்லின் உடல்நிலை சரியாக 7 நாட்கள் வரை ஆகும் என்பதால், அவர் முதல் இரண்டு ஆட்டங்களையும் தவறவிட நேரிடும் எனவும் தெரிகிறது. சமீபத்தில் தான், ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியை இந்தியா துவம்சம் செய்தது.
அந்த ஆட்டங்களில் கில்லுக்கு பெரும் பங்கு இருந்தது. மேலும், அவரின் ஆட்டம் இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் பெரும் பலமாகவும் இருக்கும். அதிலும், தற்போது ரோகித் வேறு செம ஃபார்மில் இருக்கிறார். இந்த நிலையில், கில் இல்லாதது இருவரின் கூட்டணியையும் சிதைத்து புதிய வீரர் விளையாட நேரிடும். இதற்கு மத்தியில் பிசிசிஐ, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மன் கில்லை விளையாட வைக்கவேண்டும் என முனைப்புடன் இருக்கிறது. இதேபோன்ற பிரச்சனை தான் 2019ல் இந்திய அணி எதிர்கொண்டது. அப்போது, ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இவரைத் தொடர்ந்து விஜய் ஷங்கருக்கும் காலில் காயம் ஏற்பட இந்திய அணி சற்றுத் தடுமாறியது.
சுப்மன் கில் ஓப்பனிங்கில் இறங்கவில்லை என்றால், யார் விளையாடுவார்கள்? இவரின் இடத்தை இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷான் நிரப்புவார் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு தொடக்கத்தில் வலது-இடது பேட்ஸ்மேன்களின் கூட்டணி கிடைப்பது பலம் தான் என்றாலும், கில் இல்லாமல் இந்திய அணியால் ரன்களை குவித்துவிட முடியுமா? விராத் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்பி நம்பிக்கை அளிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.