வெ.அருண்குமார்
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இரு அணியினரும் முதல் போட்டி என்பதால், இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக் கோப்பை போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி சேப்பாக்கத்தில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. விளையாடிய 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1987 இல் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே, 1996 இல் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி உலகக் கோப்பைகளில் 1987 இன் தோல்விக்கு பிறகு, 2011ல் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், இந்திய அணி 3+3 என்ற முறையில் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணைச் சேர்ந்த அஸ்வினோடு, குல்தீப், ஜடேஜா கூட்டணியுடன் களம் இறங்க உத்தேசித்து உள்ளதாக கூறப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, சமி அல்லது சிராஜ் உடன், ஹர்திக் 3 வது வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார் என பேசப்படுகிறது. இந்திய அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரரான கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஓபனிங் பேட்ஸ்மேனாக இஷானை களம் இறக்க ரோஹித் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஆட்டம் தொடங்கும் முன்பே உறுதியான தகவல் வெளிவரும். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை 4+2 என பந்துவீச்சில் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டாய்னிஸ் அல்லது கிரீன் வேகப்பந்து வீச்சு இணையுடன் ஜாம்பா, மேக்ஸ்வெல் சுழல் இணை விளையாட வாய்ப்பு உள்ளது.
இரு அணிகளும் வெற்றிகரமாக உலக கோப்பையை துவக்க முயலும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மாலை வேளையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று போட்டி முழுவதும் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சேப்பாக்கத்தில் மாலையில் 10% மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.