Skip to main content

இந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய "ஹரியானா சூறாவளி"

Published on 05/01/2019 | Edited on 06/01/2019
kapil dev


கவாஸ்கர், சச்சின், டிராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பல உலகின் சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தது பெரிய பாக்கியம். அதேபோல தற்போது கோலி, ரோஹித் ஷர்மா, புஜாரா, பும்ராஹ் ஆகியோரும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். இவர்கள் பெஸ்ட் பேட்ஸ்மேன், பெஸ்ட் பவுலர் வகையை சேர்ந்தவர்கள். 
 

1980-களில் ஆல்-ரவுண்டர் கபில்தேவ் இந்திய அணியில் விளையாடி பல வியக்க வைக்கும் ஆல்-ரவுண்டர் ஸ்கில்களை வெளிப்படுத்தினார். ஆனால் 30 ஆண்டுகள் கழித்தும் அவரை போல ஒருவர் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருடைய ஆல்-ரவுண்டர் ஸ்கில்களில் 50% கொண்ட ஒரு நபர் கூட இந்திய அணியில் விளையாடவில்லை.
 

அவுட்-ஸ்விங், யார்கர் உள்ளடக்கிய சிறப்பான பவுலிங், அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிபெற வைக்கும் மிடில்-ஆர்டர் பேட்டிங், மாஸ் கேப்டன்ஷிப், சிறந்த கோச்சிங் ஸ்கில் ஆகிய அனைத்தையும் தன்னிடம் கொண்டிருந்தார் கபில்தேவ்.  "ஹரியானா சூறாவளி"  என்று  அழைக்கப்படும் இவர் சண்டிகரில் பிறந்தார். தனது 15-வது வயதில் இவர் டெஸ்பிரேம் ஆசாத் வழிகாட்டுதலின் கீழ் தனது கிரிக்கெட் பாடங்கள் பயில தொடங்கினார்.   
 

தனது முதல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியிருந்தார். 1982-ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலம்  இந்தியா அணியை வெற்றிபெற வைத்து சாதனை படைக்க உதவினார். அதற்கு பிறகு இவர் தலைமையில்1987-ஆம் ஆண்டு நடைபெற்ற  உலகக்கோப்பை தொடரில் அரை-இறுதிப்போட்டியில் இங்கிலாந்து  அணியிடம் தோல்வியடைந்தது. பின்னர் தனது கேப்டன் பதவியை  ராஜினாமா செய்தார். 
 

1992-ஆம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையின் கீழ் அவர் கடைசி உலகக்கோப்பையை விளையாடினார். ஒரு மூத்த பந்துவீச்சாளராக அவர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் மனோஜ் பிரபாகர் ஆகிய புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தினார். 1994-ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி  ஆகியவை கடைசி போட்டியாக அவருக்கு இருந்தது. இதுவரை  131 டெஸ்ட் போட்டிகளில் 8 சதம் உட்பட  5248 ரன்கள், 434 விக்கெட்கள், 64 கேட்ச்கள் எடுத்துள்ளார். 225 ஒருநாள் போட்டிகளில் 3783 ரன்கள், 253 விக்கெட்கள், அதிகபட்சமாக 175* ரன்கள் எடுத்துள்ளார். 34 டெஸ்ட்  போட்டிகளில்  இந்திய  அணியின் கேப்டனாக  இருந்து  4 வெற்றி, 7 தோல்வி, 22 ட்ரா என அணியை வழிநடத்தியுள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் 39 வெற்றி, 33 தோல்வி, 2 ட்ரா என அணிக்கு சிறந்த கேப்டனாக வழி நடத்தினார். 
 

kapil dev


கபில் தேவின் மிகப்பெரிய சொத்தாக அவரது அவுட் ஸ்விங்  இருந்தது, பின்னர் அவர் விரும்பியபடி இன்ஸ்விங் யார்க்கர் கற்றுக்கொண்டு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அவர்  ஒருமுறை அளித்த பேட்டியில் "கடவுளே எனக்கு அவுட்ஸ்விங் திறமையை கொடுத்ததாகவும், நான் அந்த  திறமையை வளர்த்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார்". 
 

டெஸ்ட் போட்டிகளில்  ஆல்  ரவுண்டராக  4000+ ரன்கள், 400+ விக்கெட்கள்  எடுத்த  முதல்  வீரர் ஆவார். இளம் வீரராக  டெஸ்ட் போட்டிகளில்  200 மற்றும்  300 விக்கெட்கள்  எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில்  253 விக்கெட்கள்  எடுத்து, அதிக  விக்கெட்கள்  எடுத்த வீரர் என்ற சாதனையை அந்த காலங்களில் படைத்திருந்தார். உலக  கோப்பை  வரலாற்றில்  6 மற்றும் அதற்கு  குறைவான  விக்கெட்களில்  இறங்கி  175* ரன்கள்  எடுத்த  முதல் வீரர்  என்ற சாதனை  படைத்தார். தனது  பேட்டிங்  மற்றும்  பந்து  வீச்சு மூலம்  இந்திய அணியை பல போட்டிகளில்  வெற்றிபெற வைத்துள்ளார். 2002-ஆம் ஆண்டு நூற்றாண்டிற்கான விஸ்டன் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்றார்.
 

இந்திய அணியின் பயிற்சியாளராக  1999-ஆம்  ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால்  எதிர்பார்த்த  அளவில் இந்திய அணி  சிறப்பாக  செயல்படாமல்  போனதால்  தனது  பயிற்சியாளர்  பதவியை  ராஜினாமா செய்தார். 2013 ஆம் ஆண்டில் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். அதே ஆண்டில் என்.டி.டி.வி  வெளியிட்ட உலகளவில்   வாழும்   25 லேஜெண்ட்கள்    பட்டியலில்  இடம்பெற்று இருந்தார். 
 

அவருடைய சாதனைகள் இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகம். இந்திய கிரிக்கெட்டை தற்போதைய பெருமைக்கு கொண்டு சென்ற மிகப்பெரிய காரணங்களில் ஒருவராக இருந்தவர்  கபில்தேவ்  என்பது  மறக்க  முடியாத  உண்மை.