Skip to main content

பும்ரா, புவனேஷ்வர் இல்லாதது பின்னடைவு! - கிளென் மெக்ராத் கருத்து

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பும்ரா மற்றும் புவனேஷ்வர் இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். 
 

McGrath

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக நாடு திரும்பினர். இவர்களில் பும்ரா மற்றும் புவனேஷ்வரின் இழப்பு என்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தந்துள்ளது. 
 

இதுகுறித்து பேசியுள்ள கிளென் மெக்ராத், ‘இங்கிலாந்து நாட்டில் இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். தற்போதைய பேட்டிங் வரிசை அதே நம்பிக்கையையே தருகிறது. ஆனால், இங்கிலாந்தின் துருப்புச் சீட்டான ஜேம்ஸ் ஆண்ட்ரெசனை இந்திய வீரர்கள் சரியாக எதிர்கொள்ள வேண்டும். அவர் பந்தினை எளிமையாக ஸ்விங் செய்பவர் என்பதால், இந்திய வீரர்கள் களத்தில் எதற்கும் தயாராக இருக்கவேண்டும்’ என வலியுறுத்தினார். 
 

மேலும், ‘இந்திய அணியின் அதிரடியான பேட்டிங் லைனப் போல, தற்போதைய பவுலிங் கூட்டணி அமையவில்லை. குறிப்பாக அந்த அணியின் முக்கியமான பவுலர்களான புவனேஷ்வர் மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அணியின் பலத்தை அதிகப்படுத்தி இருப்பார்கள். மூன்று வேகப்பந்து மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களோடு இந்திய அணி களமிறங்க வேண்டும். குல்தீப் நிச்சயம் சாதித்துக்காட்டுவார். இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களின் பற்றாக்குறை இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்’ எனவும் கூறியுள்ளார்.