கிரிக்கெட்டில் வித்தியாசமான ரசிக்கத்தக்க சில விஷயங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டே இருக்கும். டி வில்லியர்ஸ் விளையாடும் 360 டிகிரி ஷாட்ஸ், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், கெவின் பீட்டர்சனின் ஸ்விட்ச் ஹிட், தில்ஷானின் தில்ஸ் ஸ்கூப் என மாடர்ன் டே பேட்டிங் லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். இதேபோல பவுலிங்கிலும் அவ்வப்போது புதிய வெர்ஷன் பவுலிங் அறிமுகமாகும்.
உலகெங்கிலும் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் உடல் அசைவு, பேட்டிங், பவுலிங் ஆக்ஷன் போல முயற்சி செய்கின்றனர். சச்சினின் ஸ்ட்ரைட் டிரைவ், டிராவிட்டின் கிளாச்சிக்கல் ஷாட்ஸ் போன்றவை பேட்டிங்கின் பாடப்புத்தகம் என்று கருதப்படுகிறது. அதேபோல மெக்ராத் மற்றும் சமிந்தா வாஸ் போன்ற பவுலர்களின் பவுலிங் ஸ்டைல் பவுலிங்கின் பாடப்புத்தகம் என்று அழைக்கப்படுவதுண்டு. இவர்களது பேட்டிங், பவுலிங் ஸ்டைலை பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் முயற்சி செய்ததுண்டு. ஜாகிர் கான், பிரெட் லீ ஆகியோரது பவுலிங் ஸ்டைலும் பிரபலம்.
தற்போது பும்ராவின் வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் மிகவும் பிரபலம். சர்வதேச கிரிக்கெட்டில் பும்ராவிற்கு முன்பே சில கிரிக்கெட் வீரர்கள் வித்தியாசமான முறையில் பவுலிங் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்ஸ் வித்தியாசமான முறையில் பந்து வீசுவார். அந்த பவுலிங் ஸ்டைல் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல இலங்கை அணியின் ஜாம்பவான் பவுலர்கள் முரளிதரன், மலிங்கா ஆகியோரும் வித்தியாசமான பவுலிங் முறையை கொண்டவர்கள். இவர்களது பவுலிங்கும் அவ்வப்போது சர்ச்சைகளை சந்தித்தது.
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான க்ரிஸ் ஹாரிஸ், இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான டிபாசிஸ் மோகன்தி, ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த டைட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான காம்ரான் கான் என வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் கொண்டவர்கள் பட்டியல் அதிகம். பவுலர்கள் ஒரு சில புதிய வித்தியாசமான முறையில் பவுலிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் அந்த பந்தை கணித்து விளையாடுவது சிரமமாக இருக்கும். வித்தியாசமான முறையில் பவுலர்கள் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தற்போது ஹாங்ஹாங்கில் அண்டர்-13 லீக் போட்டியில் ஒரு இளம் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சை போலவே வீசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹாங்ஹாங் கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு சிறுவன் பும்ராவை போல பந்துவீச முயன்ற வீடியோ வைரலாவது இது முதல் முறை அல்ல. பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹாங்காங் அண்டர்-13 லீக் போட்டியில் நடந்த சம்பவத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவர் பும்ராவின் பவுலிங் போல முயற்சி செய்தது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அந்த சிறுவனின் முயற்சியை பும்ரா ட்விட்டரில் பாராட்டினார்.
சமீபத்தில் பிசிசிஐ இணையதளத்தில் வெளியான புதுவிதமான ஸ்விட்ச் பந்துவீச்சு வைரலானது. இடது கை சுழற்பந்துவீச்சாளர் சிவில் கவுசிக் தலையை சுற்றி ஒரு வித்தியாசமான முறையில் 360 டிகிரி சுழற்பந்துவீச்சை வீசி பிரபலமானார். இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர், ஐ.பி.எல். தொடரில் குஜராத் லைன்ஸ் அணிக்கு விளையாடியிருந்தார். இவரது இந்த புதுவிதமான பவுலிங் பல்வேறு விமர்சனத்தை சந்தித்தது.
ஒரு காலத்தில் வெளிநாட்டு பவுலர்களின் ஆக்ஷனை இந்திய சிறுவர்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் அந்த நிலை மாறி தற்போது இந்திய அணி பவுலர்களின் ஆக்ஷன் முறையை வெளிநாட்டு சிறுவர்கள் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.