தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 9 மத்திய சிறைகளும், 138 கிளைச் சிறைகளும், மகளிர் சிறைகளும் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளுடன் 14,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிறைத்துறை யில் கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும், அவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டப்பட்டும் வருகிறது.
சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், பணியாளர்கள் வரை குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணியினை மேற் கொண்டு வருகிறார்கள். இந் நிலையில் சமீபத்தில் சிறைத் துறையில் பெரும் சர்ச்சை எழுந்து, பேசுபொருளாக மாறியுள்ளது. அது என்ன வென்றல், சிறைக் காவலர் களை மட்டும் பணியிட மாற்றம் செய்துவருவதாக சிறைத்துறையில் புகார் எழுந்துள்ளது.
தமிழக சிறைத் துறை ஏ.டி.ஜி.பி.யாக மகேஸ்வர் தயாள் பணியாற்றி வருகிறார். அவர் சிறைத்துறை அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறைகளிலுள்ள தண்டனைக் கைதிகளை காணவரும் உறவினர்கள் கைதிகளைக் காண்பதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்துவந்தன. அவ்வாறு காணும்போது அவர்களை அருகில் சென்று விசாரிக்க முடியாமலும், பார்க்க முடியாமலும், அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாத நிலைகளும் இருந்துவந்தன. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டு களில் மகேஸ்வர் தயாள் பொறுப்பேற்ற பின்னர், கைதிகளும், உறவினர்களும் பேசிக்கொள்ளும் வகையில், தொலைபேசி வசதி, காணொலிக் காட்சி வசதி, காணும் தேதியை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வசதி, இவை அனைத்தும் இணைய வழியி லேயே பதிவு செய்து பயன்பெறும்படி கொண்டுவரப்பட்டுள்ளன.
சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த உணவு வகைகளிலும் மாற்றம் செய்து, அவர்களுக்கு அரசு ஒதுக்கும் தொகையில் (தினசரி ஒருவருக்கு ரூ.130) தரமான உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தவிர, மருத்துவ வசதி, சுயதொழில் பயிற்சி கள் உள்ளிட்டவைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி பணியிட மாற்றம், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவே செயல்படுத்துவ தாகும். அந்த வகையில் கடந்த சில நாட்களில் மட்டும் திருச்சி மத்திய சிறையில் 176 பேர் உள்பட மொத்தம் 587 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசுப் பணிகளில் பணியிட மாற்றம் என்பது பொதுவாகவே, பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நாட்களைக் கருத்தில் கொண்டுதான் வழங்கப்படுகின்றன.
பணியிட மாற்றம் செய்யப்படும் நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கல்வி பாதிக்கப் படக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. மேலும், குடும்பத்தில் கணவரோ, மனைவியோ பணியாற்றும் ஊரிலிருந்து சுமார் 40 கி. மீ. தொலைவுக்கு அப்பாலும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. இதில், தற்போது சிறைத்துறையில் பணியிட மாற்றம் செய்திருப்பதில் இந்த இரு விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், சில தினங்கள் முன்பாக இந்த அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், பள்ளிகளில் கட்டணம் செலுத்திய நிலையில் குடும்பத்தை பிரிந்து சிறைக்காவலர்கள் மட்டும் பணிக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிருப்தி நிலவுகிறது.
காரணம் என்ன?
நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர் தயாளுக்கும், சிறைத்துறை அமைச்சராக உள்ள எஸ்.ரகுபதிக்கும் மோதல் ஏற்பட்டதால் இந்த பணியிட மாற்ற எண் ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் நடந்த சிறைக்காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் இருவரும் பங்கேற்றபோது, பணியிட மாற்றம் குறித்து அமைச்சர் ஏ.டி.ஜி.பி.யிடம் கேட்டதாகவும், இனியும் இதுபோல பணியிட மாற்றங்கள் செய்ய வேண்டாம் எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், ஏ.டி.ஜி.பி. ஏற்கெனவே பணியிட மாற்றம் குறித்து முடிவெடுத்து வைத்திருந்ததைத்தான் இப்போது செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் இதுகுறித்து சிறைக்காவலர்கள் கூறுகையில், "சிறைத்துறையைச் சேர்ந்த எந்த வொரு அதிகாரிகள் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் எங்களைப் போன்ற காவலர்களை, அவர்கள் விரும்பியபடி பணியிட மாற்றம் என்ற பெயரில் தூக்கியடிக்கிறார்கள். எஸ்.பி., டி.ஐ.ஜி. என்று உயரதிகாரிகள் மீது எத்தனை புகார்கள் வந்தாலும், அவர்களுக்குப் பெரிதாக எதுவும் நடப்பதில்லை. ஆனால் நாங்கள் குற்றவாளிகளைப் போல சித்தரிக்கப்படுகிறோம்'' என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.