Skip to main content

மும்பை தாக்குதலுக்கு பிறகு இங்கிலாந்து அணி செய்ததை மறந்துவிடக்கூடாது! - சுனில் கவாஸ்கர்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

gavaskar

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரத்தான போட்டியைத் திரும்ப நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தநிலையில், 2008 மும்பை தாக்குதலின்போது, பாதி தொடரில் நாட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து அணி, மீண்டும் இந்தியாவிற்கு விளையாட வந்ததைச் சுட்டிக்காட்டிய சுனில் கவாஸ்கர், அதை இந்திய அணி எப்போதும் மறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "2008ஆம் ஆண்டின் கொடூரமான தாக்குதல்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி திரும்ப விளையாட வந்தது என்பதை இந்தியர்களாகிய நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. திரும்பி வர முடியாது என கூற அவர்களுக்கு முழு உரிமை இருந்தது. எனவே கெவின் பீட்டர்சன் அந்த அணியை வழிநடத்தினார் என்பதையும், அவர்தான் அணியின் முக்கியமான மனிதர் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பீட்டர்சன் நான் போக விரும்பவில்லை என கூறியிருந்தால் அதுவே தொடரின் முடிவாக இருந்திருக்கும். பீட்டர்சன் மற்றவர்களை சமாதானப்படுத்தியதால்தான் அணியில் இருந்த மற்றவர்களும் வந்தார்கள். சென்னையில் அருமையான டெஸ்ட் போட்டி நடந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அந்த செயலை நினைவில்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.