இந்திய அணியின் தலைமை பயிற்சியளராக ராகுல் ட்ராவிட் நியமிக்கப்படவுள்ளார் என அண்மைக்காலமாக தொடர்ந்து தகவல் வெளியாகிவந்த நிலையில், அண்மையில் பிசிசிஐ ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தநிலையில், ராகுல் டிராவிட் வகித்துவந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநர் யார் என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தப் பொறுப்பிற்கு வி.வி.எஸ். லட்சுமணனை நியமிக்க பிசிசிஐ விரும்பியதாகவும், ஆனால் லட்சுமணன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் பிசிசிஐயின் அதிகாரபூர்வ வட்டாரங்கள், வி.வி.எஸ். லட்சுமணனை தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக நியமிக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளன. பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் வி.வி.எஸ். லட்சுமணன் அப்பொறுப்பை ஏற்க வேண்டும் என விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதேநேரத்தில் இதுதொடர்பான இறுதி முடிவை வி.வி.எஸ். லட்சுமணன்தான் எடுக்க வேண்டும் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.