சுழற்பந்து வீச்சை சமாளித்து நன்றாக விளையாடுவார் என நினைத்துதான் கேதர் ஜாதவை முன்னரே களமிறக்கினோம் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய திரிபாதி அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரனான வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பின்வரிசையில் களமிறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடாமல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளம்மிங் சென்னை அணியின் தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "கேதர் ஜாதவ் சுழற்பந்துவீச்சை சமாளித்து விளையாடக்கூடியவர் என்பதால்தான், அவரை முன்னரே களமிறக்கினோம். ஜடேஜா களமிறங்கியபின், ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று நினைத்தோம். ஏதாவது ஒரு கூட்டணி நிலைத்து ஆடியிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு வகையில் அமைந்திருக்கும். கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால், ரன்கள் எடுப்பதில் நெருக்கடி அதிகமானது. பேட்டிங்கில் சொதப்பியது கவலையளிக்கிறது" எனக் கூறினார்.