இலங்கையில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிடஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நிடஹாஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு பிரேமதாஸா மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. தொடக்கத்தில் இலங்கையிடம் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றிமுகத்துடன் இறுதிப் போட்டிக்கான தகுதியைப் பெற்றது. மேலும், இந்தியாவுடன் இரண்டு போட்டிகளில் மோதிய வங்காளதேசம் அணி தோல்வியை பெற்றிருந்தது. ஆனாலும், இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றது.
அந்த சமயங்களில் வங்காளதேசம் அணியைச் சேர்ந்த வீரர்கள் பாம்பு போல நடனம் ஆடினர். சொந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட இலங்கை அணி வீரர்கள் இதனால் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றுமா என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.