Skip to main content

“கூல் கேப்டன் தோனி, இனி கூலாக இருக்க முடியாது...” - ரிஷப் பண்ட்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

இந்த நூற்றாண்டில் கிரிக்கெட்டில் ஒரு பெரிய புரட்சியை ஐ.பி.எல். ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களை சர்வதேச அளவிற்கு தயார் செய்ய தொடங்கியது ஐ.பி.எல். தொடர். இந்திய அணியின் வளர்ச்சிக்கும், சர்வதேச கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல். ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகள் வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. 

 

csk

 

தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 2018-ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் மோசமான காலகட்டம். மேலும், இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் அசத்த, விவாதம் தொடங்கியது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு தோனியா? ரிஷப் பண்ட்டா? என்ற பேச்சு ரசிகர்களிடமும், முன்னாள் வீரர்களிடமும் களைகட்டியது. ஆனால், ஆஸ்திரேலியா தொடரில் ஹாட்ரிக் ஃபிப்டி அடித்து அசத்தலான கம்பேக் கொடுத்து தோனி தன் ஸ்டைலில் விமர்சகர்களுக்கு பதிலளித்தார்.  


இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷப் பண்ட் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் மைதானத்தின் நடுவில் அமர்ந்து தோனியின் சாதனைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். பின்பு “தோனி எனக்கு குரு போன்றவர். தோனி இல்லை என்றால் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வந்திருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இந்த முறை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது கூல் கேப்டன் தோனி, இனி கூலாக இருக்க முடியாது. என் ஆட்டத்தை பார்க்க ரெடியா இருங்க மஹி பாய்” என ஆரோக்கியமான சவால் விடுகிறார் ரிஷப் பண்ட்.

 


 

ரிஷப் பண்ட்டின் இந்த சவாலை தோனி பார்த்துக்கொண்டிருப்பது போல இந்த வீடியோ முடிகிறது. இதற்கு ரிப்ளை செய்யும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் “அடிச்சு அண்டர்வேரோடு ஓடவிட்டிருவேன். மானம் போன திரும்ப வராது” என பேட்ட படத்தில் ரஜினியின் மாஸ் டைலாக் வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட்டின் வீடியோவும், சிஎஸ்கே-வின் ரிப்ளையும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரென்டாகி வருகிறது. 

 

csk

 

தல தோனியை சீண்டினால் இதுதான் நடக்கும் என ஒரு பார்வையை ஒருதரப்பு ரசிகர்கள் முன்வைக்கின்றனர். நாகரிகமான முறையில் ஆரோக்கியமான ரிஷப் பண்ட்டின் சவாலிற்கு, சிஎஸ்கே அநாகரிகமான முறையில் பதிவிட்டுள்ளது என சில ரசிகர்கள் சிஎஸ்கே-வின் ரிப்ளையை விமர்சிக்கவும் செய்கின்றனர். 
 

இதுவரை 11 சீசனில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி புதுபொலிவுடன் அணியின் பெயர் மற்றும் ஜெர்சி ஆகியவை மாற்றப்பட்டு இந்த ஆண்டு களமிறங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் என்ற பெயரில், புதிய ஜெர்சியில் சிவப்பு மற்றும் நீல நிறங்கள் கொண்டு இரண்டு வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன. 
 

டெல்லி அணியில் ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா போன்ற உள்நாட்டு பேட்ஸ்மேன்கள் முன்ரோ, இன்கிராம் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சில் போல்ட், ராபடா, கிரிஸ் மோரிஸ், சந்தீப் லாமிச்சனே என டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்ற ஆண்டை விட பலமாக உள்ளது. 
 

சென்னை அணி இதுவரை 150  போட்டிகளில் 91 வெற்றி, 57 தோல்வி மற்றும் இரண்டு போட்டியில் முடிவு இல்லாமல் 60.67 சதவீத வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 162 போட்டிகளில் 67 வெற்றி, 92 தோல்வி, 3 போட்டிகளில் முடிவு இல்லாமல் 42.13 சதவீத வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் பண்ட் இதுவரை 38 போட்டிகளில் 1248 ரன்கள், 35.66 சராசரி, 128 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளார். இந்திய அணியில் மூன்று பார்மெட்டுகளிலும் இடம்பெற தயாராகிவரும் ரிஷப் பண்ட்டிற்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக கருதப்படுகிறது.