Skip to main content

விளையாட்டு துறையில் இதெல்லாம் மாற வேண்டும் - நீரஜ் சோப்ரா ஆதங்கம்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

NEERAJ CHOPRA

 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். ஈட்டி எறிதலில் அவர் வென்ற தங்கம்தான், சுதந்திரத்திற்குப் பிறகு தடகளத்தில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கமாகும்.

 

இதனையடுத்து நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள் குவிந்துவருவதோடு, அவரை பாராட்டும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்துவருகிறது. இந்நிலையில், இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகளால் தனது பயிற்சி முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும், ஒரு தங்கப் பதக்கதோடு நாம் திருப்தியடைய முடியாது எனவும் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக அவர், "இம்மாத இறுதியில் டயமண்ட் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் அதில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இடைவிடாத நிகழ்ச்சிகள் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து திரும்பியது முதல் எனது பயிற்சி முற்றிலும் நின்றுவிட்டது. நானும் நோய்வாய்ப்பட்டேன். இதனால்தான் எனது உடல்தகுதி தற்போது குறைவாக உள்ளது என நினைக்கிறேன். என்னால் முழுமையாக போட்டியிட முடியாதென்பதால், நான் டயமண்ட் லீக் போட்டியிலிருந்து விலகிவிட்டேன். இந்திய விளையாட்டுத் துறையில் இதுபோன்ற விஷயங்கள் மாற வேண்டும். மற்ற அனைத்து ஒலிம்பிக் சாம்பியன்களும் டயமண்ட் லீக்கில் பங்கேற்கிறார்கள். ஒரு தங்கப் பதக்கத்தால் நாம் திருப்தி அடைந்துவிடமுடியாது" என கூறியுள்ளார்.