இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலி, மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அதன்பிறகு இணைந்த விராட் - ரஹானே இணை ரன்குவிப்பில் ஈடுபட்டு இந்திய அணியை மீட்டது. ஆனால், விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடில் ரஷித் ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்து சதமடிக்காமல் வெளியேறினார்.
He is no question at all the best player in the world ... @imVkohli ... #100 #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 20, 2018
வெறும் 161 ரன்களில் இங்கிலாந்து அணியை சுருட்டிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதில் விராட் கோலி 103 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு இது 23-ஆவது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், இந்திய அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்குக் காரணமாக இருந்த விராட் கோலியை பலரும் பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “விராட் கோலிதான் உலகின் மிகச்சிறந்த வீரர் என்பதில் எந்தக் கேள்வியும் இருக்க முடியாது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், சச்சின் டெண்டுல்கர், ரெய்னா, லக்ஷ்மன், டாம் மூடி என பலரும் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டி வருகின்றனர்.