ஒரு விளையாட்டில் கடைசி நிமிடத்தில் கூட எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அது எந்த விளையாட்டாக இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில், கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு அணி 18 ரன்களில் ஆல் அவுட் ஆனது நடந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ளது கெண்ட் கிரிக்கெட் க்ளப். இந்த க்ளப்பின் மூலமாக ஷெபர்ட் நேம் கெண்ட் கிரிக்கெட் லீக் நடைபெற்று வந்தது. இதில் பெக்கன்ஹாம் மற்றும் பெக்ஸ்லீ கிரிக்கெட் க்ளப்புகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த பெக்கன்ஹாம் கிரிக்கெட் அணியின் வீரர்கள், ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் நான்கு மட்டுமே. முழுமையாக 49 நிமிடங்கள் பேட்டிங்கில் ஈடுபட்ட பெக்கன்ஹாம் அணி 18 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பிறகு களமிறங்கிய பெக்ஸ்லீ அணி, வெறும் 12 நிமிடங்களில் வெற்றி இலக்கை எட்டியது. முதல் தர கிரிக்கெட்டில் 152 கால நீண்ட வரலாறு கொண்ட பெக்கன்ஹாம் அணி, மிகக்குறைவான ரன்களில் ஆல்-அவுட் ஆவது இதுவே முதன்முறையாகும். அதுவும் பெக்ஸ்லீ அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் வேகமாக பரவிய நிலையில், பெங்களூரு அணியின் 49 ரன்களை இந்த போட்டியின் முடிவோடு இணைத்து மீம்ஸ்கள் வலம்வரத் தொடங்கியுள்ளன.