தற்போது நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பல பதக்கங்களை வாங்கியுள்ளது பெருமைக்குறிய விஷயம்தான். ஜகர்டாவில் நடந்த இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கத்தை வாங்கியுள்ளது. அதில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெங்களம் பதக்கங்களாகும். சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய அளவிலான பதக்க குவியல்கள் அல்ல. ஆனால், அவர்களை போன்று பதக்கங்களை வருங்காலத்தில் இந்தியா குவிப்பதற்கு இது ஒரு நல்ல ஆரம்பம். இந்த வருட ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய பலரும் தங்களுடைய திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர் என்று பல சீனியர் விளையாட்டு ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இது போன்றே நல்ல மாற்றத்தை இந்திய வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவோம். இந்தியா இதுவரை தடகளப்போட்டிகளில் இவ்வளவு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால், இம்முறை இதுவும் சாத்தியமாகியுள்ளது. இந்த ஆசிய போட்டியில் எளியோர், இளம் வீராங்கனை, உடல்நிலை சரியில்லாமல் அதிலிருந்து மீண்டு வந்தோர் என்று பலதரப்பிலான விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று பதக்கங்களை பெற்று இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அதில் இரு சாதாராண விவசாய பின்னணியைக்கொண்ட இரு பெண்களை பற்றி தெரிந்துகொள்வோம்....
![hima dass](http://image.nakkheeran.in/cdn/farfuture/kwP4dDMqQVr3Dib5lUyQSLNztr-nhulOgWPhQDrG518/1536084972/sites/default/files/inline-images/Hima-Dass.jpg)
ஹிமா தாஸ், இந்தியர்கள் பலருக்கும் மிகவும் பரிச்சயமானவர். கடந்த ஜுலை மாதம் நடந்த 20 வயதுகுட்பட்டோர் உலக தடகள போட்டியின் 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை பெற்று, தேசிய கீதம் இசைக்கும் போது கண்ணீர் கசிந்து, இந்தியர் அனைவரையும் நெகிழச்செய்தவர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலஙகளில் ஒன்றான அஸ்ஸாமில் சாதாரான விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அதிலும் தடகள ஒட்டத்தை ஒரு வருடம் மட்டுமே முறையாக பயிற்ச்சி எடுத்து, அடுத்த ஒரு வருடத்தில் தங்க பதக்கத்தையே வென்று காட்டியவர் ஹிமா தாஸ். தற்போது நடந்து முடிந்த ஆசியா விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் இந்த விவசாயின் மகள். இதன் பிறகு ஹிமாவின் ஓட்டத்திற்கு பல ரசிகர்கள், பல விளையாட்டு வீரர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்குள் இருக்கிறார். 2020 டொக்யோ ஒலிம்பிக்கில் இவர் கண்டிப்பாக எதேனும் ஒரு சாதனையை, பெருமையை இந்தியாவுக்கு தேடி தருவார் என்கிற நம்பிக்கையில் பலர் இருக்கின்றனர்.
![swapna](http://image.nakkheeran.in/cdn/farfuture/cj5848c1IabNA7ta8cMDWCnPKqjAwLHi0oxJZRcKh40/1536085006/sites/default/files/inline-images/swapna_barman.jpg)
ஸ்வப்னா பர்மன், 21 வயது மேற்கு வங்க பெண். ரிக்ஷாஓட்டுநரான தந்தை கடந்த 2013ஆம் ஆண்டில் உடல்நிலை குறைவால் படுத்தபடுக்கைக்கு சென்றுவிட்டார். தாய் தேயிலை தோட்ட தொழிலாளி. தினசரி வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக இருந்தபோதிலும் தன்னுடைய விளையாட்டு பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். குடும்ப சுழ்நிலைதான் இவரது கவனத்தை திசை திருப்புகிறது என்று பார்த்தால் இவரின் பாதமும் இவரை திசை திருப்பியுள்ளது. சாதாரணவர்களுக்கு இருப்பது போன்று 5 விரல்கள் இல்லாமல் 6 விரல்கள் இவருடைய காலில் இடம்பெற்றுள்ளது. இச்சிறப்பு காலால், இவருக்கு தேவையான காலணி இல்லாமல் தன்னுடைய கால் விரல்களை நெறுக்கும் காலணிகளை அணிந்து போட்டியில் கலந்துள்ளார். ஆசிய போட்டியில் கலந்துகொள்ளும் போதே பல் வலியால் அவதிப்பட்டு, கண்ணத்தில் ப்ளாஸ்த்திரி ஒட்டி விளையாடினார். இவர் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்ற போட்டி ஒன்றும் சாதாராணதல்ல, எழு தடகள போட்டிகளை கொண்டது. இப்போட்டிக்கு ஹெப்டத்லான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட போட்டியில், தன்னுடைய துயரங்கள், கால் வலி, பல் வலி என்று தன்னை சூழ்ந்திருந்த அத்தனை நெகிட்டிவையும் பாஸிட்டிவ்வாக்கி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். ஸ்வப்னாவிற்கு ஆசிய போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் முதுகு வலி இருந்தது. அதனை பிசியோ வைத்து சரி செய்ய உதவியர் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சச்சினுக்கு முதுகுவலி சிகிச்சை பார்த்தவரை அழைத்து ஸ்வப்னாவிற்கும் சிகிச்சையளித்துள்ளார் டிராவிட். இவருடைய கிராமத்தில் உள்ள செம்மன் சாலையில்தான் இவர் தடகளமாக பயன்படுத்தி ஓட்டப்பந்தயத்தை கற்றுக்கொண்டுள்ளார் . ஸ்வப்னா வீடு திரும்பியவுடன் அவரை பார்க்க பல விஐபிக்கள் அவருடைய வீட்டிற்கு வருவார்கள் என்பதால், அந்த கிராமத்தின் மாவட்ட நிர்வாகம் செம்மன் சாலையை கான்கீரிட் சாலைகயாக மாற்றி வருகிறது. இவருடைய சிறப்பு காலுக்கு சிறந்த காலணி செய்து தருவதாகவும் ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வாழ்க்கையே தடைகளப்போட்டி போன்று சிரமமாக இருந்தவர்களுக்கு இந்த வெற்றிகளின் மூலம் விளையாட்டில் மட்டுமே தடகளமாக மாற இருக்கிறது.