Skip to main content

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவு: விளக்கம் கேட்க தயாராகும் விளம்பர தர நிர்ணய கவுன்சில்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

virat kohli

 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பின்தொடர்ந்துவருகின்றனர். மற்ற பிரபலங்களைப் போல விராட் கோலியும், தனது சமூகவலைதளங்களில் விளம்பரங்கள் செய்வது வழக்கம். இந்தநிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் சூழலில், சில தினங்களுக்கு முன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

 

அந்தப் பதிவில் அவர், "10 சதவீத இந்திய ஒலிம்பிக் வீரர்கள் லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம் இந்திய கிரிக்கெட் அணிக்கும் வீரர்களை அனுப்பும் என நம்புகிறேன். ஜெய் ஹிந்த்" என பதிவிட்டிருந்தார். மேலும் அவர், இந்தியாவிற்கு மேலும் 10 லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகங்கள் வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இது லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகத்திற்கு செய்யப்பட்ட விளம்பரமாக கருதப்படுகிறது. ஆனால் இது விளம்பரம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்தநிலையில் விளம்பர தர நிர்ணய கவுன்சில், இந்தப் பதிவு தொடர்பாக விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. அண்மையில் சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விளம்பர தர நிர்ணய கவுன்சில் வெளியிட்டது. இந்தப் பதிவில் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படாததால், விளம்பர தர நிர்ணய கவுன்சில் விராட் கோலிக்கு இந்த நோட்டீசை அனுப்பவுள்ளது.

 

இதுதொடர்பாக விளம்பர தர நிர்ணய கவுன்சிலின் பொதுச் செயலாளர் மனிஷா கபூர், "இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பிரபலத்துக்கும் (விராட்), விளம்பரதாரருக்கும் (விளம்பரத்தை அளித்தவர்) நோட்டீஸ் அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.