கிரிக்கெட் உலகில் சிறிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தற்போது விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இது வரை 104 ஒரு நாள் போட்டிகளில் பங்குபெற்று, 55 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டிகளில் பெரிய அணியான இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, இரு அணிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இறுதி ஓவர் வரை போராடி நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்தது.
ஆரம்ப கால கட்டங்களில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள். அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு உதவிகளை செய்து வந்தது. 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் தனது போட்டிகளை விளையாட தொடங்கியது ஆப்கானிஸ்தான். மேலும் இந்தக் கால கட்டங்களில் இருந்து, இன்று வரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிக பெரிய அளவில் உதவி வருகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் தனது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை பெங்களுருவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளது ஆப்கானிஸ்தான். பி.சி.சி.ஐ-யின் இந்த ஆதரவு, ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய தூண்டுகோலாக இருந்து வருகிறது.
2015 – ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஆப்கானிஸ்தான் அணி 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 வெற்றிகளை கண்டிருந்தது. 2015 – ஆம் ஆண்டிற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 33 வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. டி20 போட்டிகளைப் பொறுத்த வரை, இது வரை 68 போட்டிகளில் பங்கேற்று 46 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.சி.சி. தர வரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் 10-வது இடத்தையும், டி20 போட்டிகளில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சுதான் முக்கிய காரணம். ரஷீத் கான், மொஹம்மத் நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சுழலில் எதிர் அணியினர் சமாளிக்க முடியாமல் திணறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. பேட்டிங் மற்றும் வேகபந்து வீச்சு சராசரியாக இருந்தாலும், சுழல் பந்து வீச்சு மற்ற இரண்டு துறைகளையும் ஈடுகட்டி விடுகிறது.
ரஷீத் கான் ஐ.சி.சி பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டியில் 2- வது இடத்திலும், டி20 போட்டிகளில் முதல் இடத்திலும் உள்ளார். மேலும், ஒருநாள் ஆல் ரவுண்டர் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொறு முக்கிய வீரரான ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொஹம்மத் நபி 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2333 ரன்களும், 112 விக்கெட்களும் எடுத்து உள்ளார். அவர் 65 டி20 போட்டிகளில் 1014 ரன்களும், 67 விக்கெட்களும் எடுத்து உள்ளார். ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் 17-வது இடமும், டி20 போட்டிகளில் 11-வது இடமும், ஒருநாள் ஆல் ரவுண்டர் பட்டியலில் 4-வது இடமும், டி-20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் 2-வது இடமும் பெற்று அசத்தி வருகிறார்.
ரஷீத் கான் ஐபிஎல் போன்ற உள்ளூர் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அவர் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் போன்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். மொத்தமாக 120 டி20 போட்டிகளில் 190 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மொஹம்மத் நபி 6 நாடுகளை சேர்ந்த உள்ளூர் போட்டிகளில் 180 போட்டிகளில் 2508 ரன்களை எடுத்துள்ளார். மேலும் அவர் 198 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
150 வருட கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் விளையாட்டுகளில் இதுவரை 11 அணிகள் மட்டுமே தகுதி பெற்று இருந்தது. புதிதாக ஆப்கானிஸ்தான் அணியும் இந்த ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பை பெற்று 12 வது அணியாக கிரிக்கெட் அரங்கில் பெருமை அடைந்தது. மேலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் புது சாதனைகளைப் படைக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி வீரர்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்குபெற வைப்பதன் மூலம், வரும் காலங்களில் அவர்களிடமிருந்து நிறைய நல்ல வீரர்களையும், மிகப்பெரிய சக்தி வாய்ந்த சிறந்த அணியையும் எதிர்பார்க்கலாம்.