ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் அடித்து ஆர்.சி.பி.வீரர் ஒருவர் அதிரடியில் அதிசயிக்க வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஐபிஎல் 2024இன் 45ஆவது லீக் ஆட்டம் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றிய போட்டி முத்ற்கொண்ட், இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பில் கொஞ்சமாவது நிலைத்திருக்க முடியும் என்பதால் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. குஜராத் அணியும் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப் வாய்ப்பு வலுப்பெறும் என்பதால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு தொடங்கியது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சஹா, கில் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் பொறுப்பான அதே நேரத்தில் அதிரடியான பேட்டிங்கால் குஜராத் அணி சரிவில் இருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய ஷாருக்கான் ஐபிஎல்-இல் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மில்லர் வழக்கம் போல அதிரடியாக 26 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய சுதர்சன் அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சிராஜ், ஸ்வப்னில் சிங், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 201 ரன்கள் என்பது கடின இலக்கு போலத் தோன்றினாலும், எல்லா ஆட்டங்களிலும் எளிதில் அடிக்கப்படுவதால் நம்பிக்கையுடன் பெங்களூரு அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணிக்கு டு பிளசிஸ் நல்ல தொடக்கம் கொடுத்து 24 ரன்களில் வழக்கம் போல நடையைக் கட்டினார். எப்போதும் போல பொறுப்புடன் ஆடிய கோலியுடன் அதிரடி வீரர் வில் ஜேக்ஸ் இணைந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் சிதறடித்தார்.
கோலி அரைசதம் கடந்து 70 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். மறுபுறம் வில் ஜேக்ஸ் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அடுத்த ஆறு நிமிடங்களில் 50 ரன்கள் எடுத்து 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 10 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல்-இல் இது 5ஆவது அதிவேக சதமாகும். மாலை 6.41 க்கு அரை சதம் கடந்த வில் ஜேக்ஸ் 6.47 க்கு சதம் கடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.சி.பியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.