பதற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போதாவது ஏற்படக்கூடியதே. ஆனால் எப்போதுமே ஏற்பட்டால் அது மிக மோசமான விளைவுகளைக் கொடுத்துவிடும்.பதறிய காரியம் சிதறும்’ என்பார்கள். எந்தவொரு செயலையும் அது எவ்வளவு அவசரமானதாக இருந்தாலும் நிதானமாக யோசித்து செய்ய வேண்டும். அவசர அவசரமாகச் செய்தால் அதனால் வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஏழு மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றால் எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும்? செல்லப்போவது காரிலா, டூ வீலரிலா, ஆட்டோவிலா, மாநகரப் பேருந்திலா என்பதை முன்னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.ரயில் நிலையம் செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்றால் நீங்கள் நிச்சயமாக ஐந்தரை மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். முடிந்தால் ஐந்து மணிக்கே கிளம்பலாம் தப்பில்லை.
ஏழு மணிக்குத்தானே என்று நினைத்துக் கொண்டு வீட்டில் இருந்து ஆறு மணிக்குப் புறப்படுவார்கள். அதற்கு முன்னதாக எதில் செல்ல வேண்டும் என்றும் தீர்மானித்திருக்க மாட்டார்கள். அப்போதுதான் ஆட்டோ கிடைக்கிறதா, கால் டாக்சி கிடைக்கிறதா, பேருந்து வருகிறதா என்று பரபரப்பாகத் தேடுவார்கள். சொந்த வாகனமாக இருந்தால் டயரில் காற்று குறைவாக இருப்பது அப்போதுதான் நினைவிற்கு வரும்.இப்படிப்பட்டக் கூத்துகளால் ஒன்று ரயிலைக் கோட்டை விட்டுவிடுவார்கள். அல்லது வழியில் சிக்னலில் மாட்டிக் கொண்டு டென்ஷன் ஆவார்கள். இல்லையென்றால் இருக்கிறவர்களை எல்லாம் சீக்கிரம், சீக்கிரம் என்று விரட்டோ விரட்டென்று விரட்டி டென்ஷன் பண்ணுவார்கள். எதற்காக இப்படிப் பதற்றமடைய வேண்டும்? நிதானமாக யோசித்தால் இந்தப் பிரச்சனையைச் சந்திக்காமல் தவிர்த்திருக்க முடியும் அல்லவா!.
இரண்டு எலிகள் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. ஒருநாள் இரவு இரண்டுக்கும் நல்ல பசி. ஏதாவது கிடைக்கிறதா என்று அவை ஒளிந்து கொண்டிருந்த சமையலறையில் தேடின. ஒரு பானையில் பால் இருந்தது. ஆனால் அது உயரமானதாக இருந்ததால் பாலைப் பருக முடியாமல் இரண்டும் திண்டாடின. ஒரு யோசனை தோன்றியது. ஒரு எலியின் மீது ஏறி இன்னொன்று பாலைக் குடிப்பது என்றும், பாதிக்கு மேல் இன்னொரு எலியின் மீது ஏறி மற்ற எலி பாலைப் பருகுவது என்றும் முடிவு செய்து கொண்டன. அவ்வாறே முதலில் ஒரு எலி பாலைக் குடித்தது. அதற்கு முதுகைக் கொடுத்துக் கொண்டிருந்த எலிக்குத் திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது. பால் முழுவதையும் அதுவே குடித்துவிட்டால் என்ன செய்வது என்று பதற்றம் ஏற்பட்டது.போதும், போதும். அடுத்தது நான் குடிக்க வேண்டும் என்று பதற்றத்தில் பெருங்குரலில் கத்தியது.
திடீரென்று கீழே இருந்த எலி கத்தியதும் அது பதறிப்போய் மிரண்டது. இதனால் பால் பானைக்குள் தவறி விழுந்துவிட்டது.இதைப் பார்த்த இந்த எலிக்கு இப்போது ஒரே சந்தோஷம். பானையில் உள்ள பால் முழுவதும் இனிமேல் தனக்குத்தான் என்று மகிழ்ந்தது. ஆனால் அந்தப் பாலை எப்படிக் குடிப்பது என்று தெரியாமல் பானையையே சுற்றிச் சுற்றி வந்தது. பானையில் ஏறவே முடியவில்லை.கடைகியில் பசி தாங்க முடியாமல் செத்துப் போனது.பதறினால் நிலைமை இப்படித்தான் வந்து முடியும். பொறுமை யாக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? யோசிக்க வேண்டும். எப்போதும், எந்த நேரத்திலும் பதற்றம் அடையவே கூடாது. அது உங்களின் உயிர்க்கொல்லி என்பதை உணர வேண்டும். அது உங்களின் ஜென்ம விரோதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.