இன்றைய சமூகத்தில் எதிர் மறையான சிந்தனைகள் அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றன .அதுவும் சமூக வலைதளத்தில் நம்மளுடைய எதிர் மறையான கருத்துகளும் வன்மமும் அதிகமாக காணப்படுகிறது .‘தீயதைப் பார்க்காதீர்கள்; தீயதைப் பேசாதீர்கள்; தீயதைக் கேட்காதீர்கள்’ என்பார்கள். இதில் இன்னொன்றையும் -அதாவது தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிற மாதிரியான எந்தப் பேச்சையும் கேட்காதீர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்று அவநம்பிக்கை அளிக்கும் பேச்சுக்கள் தான் நம்மவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. ‘‘உங்க பையனை மெடிக்கலில் சேர்க்க வேண்டியது தானே?’’‘‘ஆமா, இவன் படிக்கிற படிப்புக்கு பாஸானா போதாதா!’’இப்படித் தனது மகனைப் பற்றி அவநம்பிக்கையோடு பேசும் அப்பாக்கள்தான் இன்று அதிகமாக இருக்கிறார்கள்.அதிகாரியிடம் ஏதாவது ஒரு புதிய யோசனையை உதவியாளர் தெரிவித்தால், ‘‘அதெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்று உடனேயே தட்டிக்கழிப்பார். இப்படி எந்தவொரு செயல்பாட்டிலும் அவநம்பிக்கையான சிந்தனை. அதைரியம் ஊட்டும் பேச்சு. ஊக்கத்தைக் கெடுக்கும் வகையான உரையாடல். இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களிடம் போய் யோசனை கேட்பது மிகவும் தவறு. எந்தவொரு செயலையும் நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே அதில் நிச்சயமான வெற்றியைப் பெற முடியும்.
ஒரு ஊரில் ஒரு பந்தயம் நடந்தது. அதாவது மேற்கே உள்ள சிறிய மலையின் உச்சியை முதலில் போய் தொடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்பதுதான் அந்தப் போட்டி.பந்தயத்தில் பலர் பங்கு பெற்றனர். எல்லோரும் ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடியிருந்தோர்களில் சிலர் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களிடம், ‘இது அத்தனை சுலபமான போட்டி கிடையாது. மலை உச்சியைத் தொடுவது என்பது மிகவும் கஷ்டம். உயரமான இடத்தை நோக்கி ஓடுவதால் மூச்சிரைப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் வந்துவிடக்கூடும். இன்னும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஒரு லட்சம் ரூபாய்க்காக உயிரையே விடுவது சரியாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். அத்துடன் மலை சிறியது என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அதன் உச்சியைத் தொடுவது என்பது எளிதல்ல. எவராலும் அங்கே செல்ல முடியாது. எனவே பரிசுப் பணம் யாருக்குமே கிடைக்கப் போவதில்லை’’ என்று அவநம்பிக்கை தரும் விதமாகப் பேசினர்.இதனைக்கேட்டதும் நிறைய பேர் பயந்துவிட்டனர். தைரியம் இழந்தனர். போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.இன்னும் சிலரோ ஓடத் தொடங்கினர். சற்று தூரம் மலையில் ஓடியபோது மூச்சிரைக்கவே, மாரடைப்பு வந்துவிடுமோ என்று பயந்து போட்டியில் இருந்து விலகிவிட்டனர்.இவ்வாறு பந்தயத்தில் கலந்து கொண்ட அனைவருமே பாதி தூரம் சென்றதுமே போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.ஆனால் ஒருவர் மட்டும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார்.
எல்லோருக்கும் ஆச்சரியம்!எப்படி அவர் மட்டும் நம்பிக்கை இழக்காமல் ஓடுகிறார் என்று வியந்தனர்.கடைசியாக அந்த நபர் மலை உச்சியை அடைந்து வெற்றி வாகை சூடினார்.அவநம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசிய கூட்டத்தினர் அனைவரும் இப்போது அந்த நபரைப் பாராட்டினார்கள். ஒரு லட்சம் ரூபாயும் அவருக்குக் கிடைத்தது.‘‘எல்லோரும் நம்பிக்கை தளர்ந்து பந்தயத்தில் இருந்து விலகிய பிறகும் அந்த நபர் மட்டும் எப்படி நம்பிக்கையோடு ஓடினார்’’ என்று யோசித்தனர்.பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது, அந்த நபர் கேட்கும் திறன் இல்லாதவர்!இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் ஊர் என்ன சொன்னாலும், எத்தனை அவநம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தாலும் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், கேட்கும் திறனை இழந்தவரைப்போல இருக்க வேண்டும் .