இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்குமான பொதுவான ஒரு ஆசை. ஒரு குறிப்பிட்ட உணவு முறையின் மூலம் அதை சாதிக்க முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா...
பிறக்கும்போதிருந்தே நாம் அனைவரும் அசைவம் தான். ஏனெனில் தாய்ப்பாலே வெஜிடேரியன் கிடையாது. மனிதனின் மூலம் வருவதால் தாய்ப்பாலும் மிருகம் சார்ந்ததுதான். எனவே இங்கு யாரும் சைவம் என்று சொல்ல முடியாது. பால் இல்லாத மோர், தயிர் இல்லாத ஆரோக்கியமான டயட் ஒன்று இருக்கிறது. அதுதான் வீகன் டயட். இதை நான் முதலில் பின்பற்றியபோது என்னுடைய இளமை கூடியதை உணர்ந்தேன். அதன் பிறகு இதுகுறித்த புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன். உலகில் பல சாதனையாளர்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றியவர்கள் தான்.
ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய 16 வயதிலிருந்து, பதினைந்து வருடங்களாகத் தன்னுடைய கண்ணுக்குள் ஏதோ ஒன்று உறுத்துவது போன்ற வலி தொடர்ந்து இருந்தது. கண்களில் அவ்வப்போது ஏற்படும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. முதலில் அந்தப் பெண்ணின் மன அழுத்தத்தைப் போக்கினேன். வீகன் உணவு முறையைப் பரிந்துரைத்தேன். அதன் பிறகு அந்த நோயிலிருந்து அந்தப் பெண் 75% குணமடைந்தார். அதன் பிறகு இப்போது வரை இரண்டு வருடங்களாக அவர் அறுவை சிகிச்சையே செய்து கொள்ளவில்லை.
டயட் மற்றும் கவுன்சிலிங் மூலம் நடந்த மேஜிக் அது. வேறு எந்த மருத்துவத்தாலும் அந்த நோயை அதற்கு முன் குணப்படுத்த முடியவில்லை. 21 நாட்கள் இந்த உணவு முறையை நாம் பின்பற்றினால் வயிறு சுத்தமாகும். ஆனால், நீண்ட காலத்துக்கு இந்த உணவு முறையைப் பின்பற்றக் கூடாது. நடைமுறை வாழ்க்கைக்கு அது சரி வராது. வருடத்துக்கு ஒருமுறை வீகன் முறையைப் பின்பற்றலாம். பச்சை காய்கறிகள் தான் பெரும்பாலும் இந்த உணவு முறைக்கான உணவு வகைகள். பால் இல்லாத பச்சை காய்கறிகள் நிறைந்த சைவ உணவு முறை இது.
70 சதவீதம் சமைக்காத உணவுகளையும் 30 சதவீதம் சமைத்த உணவுகளையும் உண்ண வேண்டும். புரோட்டின் தரும் உணவுகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவு முறையின் மூலம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். டயட் இருக்க ஆரம்பித்த ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே 16 கிலோ வரை உடல் எடையை குறைக்கும் தன்மை இந்த டயட்டுக்கு உண்டு. முறையான டயட் கன்சல்டிங்க் செய்த பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். உடலின் தன்மையை அறியாமல் மருத்துவரை அணுகாமல் டயட் எடுத்துக்கொள்ள கூடாது.