உங்கள் குழந்தைகள் நலமா- பாகம் 6
உடலாலும் மனதாலும் இன்றைய வாழ்வியலுக்குத் தகுந்தாற்போல் நம் பிள்ளைகளை தகுதியாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை மட்டுமல்ல; இந்த சமுதாயத்தின் கடமையுமாகும். ஆனால், வெறும் புத்தகப் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோரும் சமூகமும் குழந்தைகளின் உடலினை உறுதி செய்ய எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. A Sound Mind in a Sound Body என்பதெல்லாம் பழமொழியோடு மட்டுமே நின்று போகிறது. நர்சரி கல்வி என்று பிஞ்சுகளை 5 வயதில் பள்ளிக்கு அனுப்பிய காலம் மலையேறிப்போய், இன்று Toddler Education என்று ஒரு வயது முதலே குழந்தைகளுக்கான கல்வி பயிற்சியைத் தொடங்க ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். ஆனால், குழந்தைகளின் மூளையை வளர்ப்பதில் காட்டப்படும் ஆர்வம், குழந்தையின் உடலை வலுவாகவும், மனதைத் திடமாகவும் வளர்ப்பதில் காட்டப்படுவதில்லை.
அதற்குக் காரணம் பெற்றோர் மட்டுமல்ல. சமூக சூழலும்தான். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால் மட்டுமே பொருளாதார ரீதியாகவும், கௌரவ ரீதியாகவும் குடும்பத்தை உயர்த்த முடியுமென்ற கட்டாயத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய சூழலில் குழந்தைகளைக் காப்பகங்களில் விடுவது ஒன்றே சாத்தியம். ஏனென்றால், கூட்டுக்குடும்பம் என்பது நம் தமிழ்நாட்டிலிருந்து வழக்கொழிந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் தாத்தா, பாட்டிகளோடு வளரும் வாய்ப்புகளும் குழந்தைகளுக்கு இல்லை. மேலும், பெரும்பாலான வீடுகளில் பாட்டிகளும் பணியில் இருக்கும் நிலைமையே உள்ளது.
பெரியவர்களிடம் கதை கேட்டு வளரும் குழந்தைகளுக்கு, இனத்தின் வரலாறு, வாழ்வியல், தத்துவங்கள் ஆகியவை கதைகள் வழியாக எளிதாக சென்று சேர்ந்துவிடும். அவர்களின் கற்பனைத்திறனும் அதிகரிக்கும். பெரியவர்கள் கூறும் மனக்கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்கும் குழந்தைகளுக்கு Aptitude Ability எனப்படும் சூட்சும மூளைத்திறன் அதிகரிக்கும். மேலும், ஒற்றைப் பிள்ளையாய் இருக்கும் குடும்பத்தின் பிள்ளை, தன் பள்ளியில் நடந்த சம்பவங்களை பாட்டி, தாத்தாக்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது; பெரியவர்களிடமிருந்து கிடைக்கும் யோசனைகள் குழந்தைகளின் அனுபவ அறிவை விரிவாக்க உதவும்.
இதெற்கெல்லாம் வாய்ப்பே அமையாத காலம் இது. அதனால்தான் இன்று பல குழந்தைகளின் Aptitude Skill குறைவாக இருக்கிறது. உடனே அதற்கென்று ஒரு கோச்சிங் கிளாஸ் அனுப்பிவிடுகின்றனர் பெற்றோர். அபாக்கஸ் தொடங்கி ரோபோடிக்ஸ் வரை எங்கெங்கு காணினும் கோச்சிங் கிளாஸ்கள் கோலோச்சத் தொடங்கிவிட்டன. கிராமம், நகரம் என்ற பேதமெல்லாம் இல்லாமல் நீக்கமற நிரம்பி வழிகின்றன இத்தகைய கோச்சிங் வகுப்புகள். இப்படியான மூளை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் விளையாட்டு சார்ந்த பயிற்சி வகுப்புகள்.
பயிற்சி வகுப்புகள் தரமானவையாக இருத்தல் அவசியம். அதோடு, அவை குழந்தைகளைக் குழந்தைகளாக; அவர்களின் இயல்புகள் பாதிக்காத வண்ணம் பயிற்றுவிக்கும் பட்டறைகளாய் இருக்கவேண்டுமே தவிர, குழந்தைகளை ரோபோக்களாய் மாற்றிவிடும் பணிமனைகளாய் ஆகிவிடக்கூடாது என்பதே நம் கவலை. ஏனெனில் பல பயிற்சிக்கூடங்கள் குழந்தைகளை நேரடியாய் நோபல் பரிசு வாங்கவும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கவும் தயாராக்கும் அதிவேக Workshops போலவே நடத்தப்படுகின்றன. எந்த ஒரு துறையிலும் அடிப்படை அறிவு சரியாக இருந்தால் மட்டுமே யாராலும் அந்தத் துறையில் பரிமளிக்க இயலும். அடிப்படை அறிவை ஆழமாக்காமல், குறுக்கு வழிமுறைகளைக் கொண்டு கற்பித்தல் பிற்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது.
’ஃபாஸ்ட் மேத்ஸ்’ எனப்படும் அதிவிரைவு கணக்கிடும் முறைகளைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் இன்று காளானாய்ப் பெருகிவிட்டன. விரைவாக கணக்குகளை செய்யும் முறையை கற்றுக்கொள்ளுதல் அவசியம்தான். ஆனால், எந்தப்பாடத்தையும் நிதானமாக, குறிப்பிட்ட நேரம் எடுத்து படித்தால் மட்டுமே அவை நீண்ட நாட்களாய் மூளையில் பதியும். பிற்காலத்தில் தேவைப்படும் நேரங்களில் அப்பாடங்களை நினைவுகூர்ந்து பயன்படுத்தமுடியும். ஆனால், வேகமாய் அவசரமாய் மூளைக்குள் செலுத்தப்படும் பாடங்கள், அதே வேகத்தில் மூளையிலிருந்து அழிந்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, கணக்கு போன்ற தேற்றங்கள், சூத்திரங்கள் அதிகம் உள்ள, பின்னாளில் நினைவுகூறப்பட வேண்டிய பாடங்களை நிதானமாய் படிக்க வைப்பதே நல்லது. அப்படி நிதானமாய், ஆழமாய் கற்பித்தல் என்பது பள்ளிகளில் மட்டுமே சாத்தியம்.
சென்ற வாரம் NCERT (National Council of Educational Research And Training) எனப்படும் தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் கல்விச் சுமையை குறைக்கவும், கல்விச் சுமையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனஉளச்சலைத் தவிர்க்கவும் என்னென்ன வழிமுறைகளை செய்யலாம் என்ற பரிந்துரைகளை அனுப்புமாறு; பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இங்கு நாம் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால், மத்திய அரசின் நிறுவனம் ஒன்று நாடளாவிய அளவில் இப்படி பொதுமக்களிடம் பரிந்துரைகளைக் கேட்கிறது என்றால், அந்த அளவு கல்விச்சுமையால் நம் பிள்ளைகள் பாதிக்கப்பட்டதாய், அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருக்கவேண்டும் என்றுதான் அர்த்தம். அதன் வெளிப்பாடுதான் இந்த சுற்றறிக்கையும். “வாரம் இரண்டு நாட்கள், நாடளாவிய கட்டாய விடுமுறை எல்லாப் பள்ளிகளுக்கும் தேவையென்று அறிவியுங்கள்” என்று நானும் NCERT க்கு பரிந்துரைத்திருக்கிறேன்.
சமச்சீர், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என்று ஆயிரத்தெட்டு பாடத்திட்டங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் அடிப்படையாய் இன்னும் இங்கு பின்பற்றப்படுவது மெக்காலே கல்விமுறை மட்டுமே. இந்தியர்களைக் கையெழுத்துப் போடத்தெரிந்த கணக்கர்களாய் மட்டுமே எப்போதும் வைத்திருக்க லார்ட் மெக்காலே என்னும் பிரிட்டிஸ்காரர் உருவாக்கிய முறையே இந்த மெக்காலே கல்விமுறை. இந்தியர்களை அடிமையாகவே வைத்திருக்க ஒரே வழி, அவர்களிடம் இருக்கும் முறையான கல்விமுறையை மொத்தமாய் அழிப்பது மட்டுமே என்று முடிவெடுத்து இங்கே ஆங்கிலேயர்களால் செயல்படுத்தப்பட்ட கல்விமுறைதான், இந்த மெக்காலே கல்வி முறை. பிரிட்டிஸ்காரர்கள் போன பிறகும், இந்தக் கல்விமுறை மாற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடயம். இந்தக் கல்விமுறைதான் நம் குழந்தைகளின் உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் பொது எதிரியாய் உள்ளது.
அடுத்தவாரம், நம் பண்டைய கல்விமுறையில் இருந்த பாடத்திட்டங்கள், இப்போதைய பாடத்திட்டங்கள் மற்றும் அவை எவ்வகையில் நம் பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தன என்பது பற்றி பார்ப்போம்.
(தொடரும்....)