வள்ளலார் பரிந்துரைத்த கிழங்குகளில் மிகவும் அற்புதமான கிழங்கு கருணைக்கிழங்கு. இதை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.
கிழங்கு வகைகளில் கண்டிப்பாக நாம் சாப்பிட வேண்டிய ஒரு கிழங்கு கருணைக்கிழங்கு. இதைச் சாப்பிடுவதால் மூலம் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். சித்தர்கள் அனைவரும் பரிந்துரைக்கும் முக்கியமான கிழங்கு இது. பித்தம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கருணைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம் தான். உணவை சரியான முறையில் செரிமானம் செய்வதற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது.
இப்போது நாம் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு தான் அதிகமாக கொடுக்கிறோம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிள்ளைகளுக்கு நாம் கருணைக்கிழங்கு தர வேண்டும். மூலநோய் ஏற்பட்டவர்களுக்கு கருணைக்கிழங்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. கருணைக்கிழங்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதில் நமக்கு கிடைப்பது ஒரு வகை தான். மற்றவை மலைப்பிரதேசங்களில் கிடைக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை குறையும். புளிக்கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்தால் அமிர்தம் போன்ற சுவை தரக்கூடியதாக கருணைக்கிழங்கை நிச்சயம் மாற்ற முடியும்.
கருணைக்கிழங்கை மசியலாகவும், லேகியமாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கருணைக்கிழங்கு லேகியம் சாப்பிடலாம். கருணைக்கிழங்குடன் மோரையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதில் அதிகம் மிளகாய் தூள் சேர்த்து கொடுக்கக்கூடாது. அகத்திக்கீரை சேர்த்து கருணைக்கிழங்கை சமைத்துக் கொடுப்பது நல்லது.
இதன் மூலம் உட்காரவே முடியாமல் சிரமப்படுபவர்கள் கூட வித்தியாசத்தை உணர்வார்கள். குடல் சார்ந்த பிரச்சனைகளால் தான் நிறைய பேருக்கு பைல்ஸ் ஏற்படுகிறது. குடல் சார்ந்த பிரச்சனைகளையும், பித்தத்தையும் தணிக்கக் கூடியதாக கருணைக்கிழங்கு இருக்கிறது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கிழங்கும் புளித்த கீரையும் சாப்பிட வேண்டும் என்று வள்ளலார் சொல்கிறார். இது உடல் சூட்டைத் தணித்து மலமிளக்கியாகவும் செயல்படும். எனவே கருணைக்கிழங்கை ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு முறையாவது நாம் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.